Steve Smith Record: 10 ஆயிரம் ரன்கள்! டெஸ்ட் கிரிக்கெட்டில் புது உச்சத்தைத் தொட்ட ஸ்மித்!
டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டி ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் புது சாதனை படைத்துள்ளார்.

கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலே 10 ஆயிரம் ரன்களை எட்டும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், 1 ரன்னில் அந்த சாதனையை படைக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
ste
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணிக்காக முதல் விக்கெட்டிற்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாக 57 ரன்கள் எடுத்து அவுட்டாகிய நிலையில், அடுத்து வந்த லபுஷேனே 20 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 1 ரன் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்திற்கு மைதானத்தில் இருந்த ரசிகர்களும், இரு அணி வீரர்களும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். கேப்டனாக இருக்கும்போது இந்த சாதனையை அவர் எட்டியிருப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
4வது ஆஸ்திரேலிய வீரர்:
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 15வது வீரர் ஸ்மித் ஆவார். ஆஸ்திரேலிய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய 4வது வீரர் ஸ்மித் ஆவார். இதற்கு முன்பு ஆலன் பார்டர், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் மட்டுமே இந்த சாதனையை எட்டியிருந்தனர்.
35 வயதான ஸ்மித் பாகிஸ்தானுக்கு எதிராக 2010ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தற்போது வரை 115 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஸ்மித் 4 இரட்டை சதங்கள், 34 சதங்கள், 42 அரைசதங்களுடன் 10 ஆயிரத்து 68 ரன்கள் எடுத்துள்ளார். 205 இன்னிங்சில் பேட் செய்துள்ள ஸ்மித்தின் அதிகபட்ச ரன் 239 ஆகும். டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் சராசரி 56.25 வைத்துள்ளார்.
ஸ்மித்திற்கு குவியும் பாராட்டு:
பால் டேம்பரிங் விவகாரத்திற்கு பிறகு ஓராண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தடையில் இருந்து மீண்டு வந்த ஸ்மித் சிறப்பாக ஆடி இந்த சாதனையைப் படைத்துள்ளார். ஸ்மித்திற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஸ்மித் 165 ஒருநாள் போட்டியில் ஆடி 12 சதங்களும், 34 அரைசதங்களும் விளாசி 5 ஆயிரத்து 662 ரன்கள் எடுத்துள்ளார். 67 டி20 போட்டிகளில் ஆடி 1094 ரன்களும், 103 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 485 ரன்களும் எடுத்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்வசம் வைத்துள்ளார். அவர் 15 ஆயிரத்து 921 ரன்களுடன் உள்ளார். ஸ்டீவ் ஸ்மித் இந்த டெஸ்ட் தொடரிேல யூனிஸ் கான், கவாஸ்கர் சாதனையை முறியடிக்க வாய்ப்புகள் உள்ளது.
மிரட்டும் ஆஸ்திரேலியா:
தற்போது, காலேவில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி உஸ்மான் கவாஜா சதம் மற்றும் ஸ்மித்தின் பேட்டிங்கால் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 276 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.