இந்தியாவில் அக்டோபர் 5ம் தேதி முதல் ஒருநாள் உலகக் கோப்பை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  இங்கிலாந்து - நியூசிலாந்து இடையேயான முதல் போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 


இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகளில் தயாராகும் வகையில் அனைத்து அணிகளுமே தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக போட்டிக்கு ஆஸ்திரேலிய அணியை தயார்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் 18 பேர் கொண்ட தற்காலிக அணியை அந்த நிர்வாகம் அறிவித்தது. அதன்படி, மார்னஸ் லாபுசாக்னே உள்ளிட்ட வீரர்கள் இல்லாமல் பாட் கம்மின்ஸ் தலைமையிலான உலகக் கோப்பை தற்காலிக 18 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டது.


இந்தநிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு தொடரில் காயம் காரணமாக கேப்டன் பேட் கம்மின்ஸ் ஏற்கனவே வெளியேறியிருந்த நிலையில், தற்போது ஸ்மித், ஸ்டார்க் காயத்தால் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார், அவருக்கு பதிலாக ஆஷ்டன் டர்னர் டி20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் மார்னஸ் லாபுசாக்னே ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மிட்செல் ஸ்டார்க், இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டதால் அவருக்கு பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஸ்பென்சர் ஜான்சன் சேர்க்கப்பட்டுள்ளார். பாட் கம்மின்ஸ் பதிலாக டி20 கேப்டனாக அறிவிக்கப்பட்ட மிட்செல் மார்ஷ் அணியை வழிநடத்துவார் என கூறப்படுகிறது. 


இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு திரும்பும் ஸ்மித், ஸ்டார்க்...


ஆஸ்திரேலிய அணியின் தலைமை தேர்வாளர் ஜார்ஜ் பெய்லி கூறுகையில், இரு வீரர்களும் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இருந்து வெளியேறியது, எங்களுக்கு அதிகப்படியான அழுத்தத்தை தந்தது. ஸ்மித் மற்றும் ஸ்டார்க் உலகக் கோப்பைக்கு முன் முழு உடல் தகுதியுடன் இருப்பார்கள், மேலும் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவர்கள் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கலாம். தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா ஆகஸ்ட் 30ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இதன் பிறகு, அந்த அணி செப்டம்பர் 7 முதல் நடத்தும் அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.


தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகள் முறையே மொஹாலி, இந்தூர் மற்றும் ராஜ்கோட்டில் செப்டம்பர் 22, 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும். அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் உலகக் கோப்பைக்கு ஆஸ்திரேலிய அணி தயாராகும் வகையில் இந்த தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:


டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், ஜோஸ் இங்கிலிஸ், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), கேமரூன் கிரீன், ஆரோன் ஹார்டி, ஸ்பென்சர் ஜான்சன், சீன் அபோட், ஆஸ்டன் அகர், ஆடம் ஜம்பா, தன்வீர் சங்கா, ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் நாதன் எல்லிஸ்.


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:


மாட் ஷார்ட், டிம் டேவிட்ஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், ஜோஷ் இங்கிலிஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் எல்லிஸ், ஆஷ்டன் டர்னர், மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஸ்பின்னர் ஜான்சன், டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஆடம் ஜம்பா, கிளென் மேக்ஸ்வெல், சீன் அபோட்.