உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள் ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். 


15வது 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பையில் லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து  என 10 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றது. இதில் முன்னணி அணிகள் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 


அதில் இலங்கை அணியும் ஒன்று. இதுவரை அந்த அணி 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. அந்த அணி ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பிலிருந்து வெளியேறி விட்டது. இன்னும் 3 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அதில் முதல் ஆட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. அதில் வங்கதேசம் அணியுடன் இலங்கை அணி மோதுகிறது. இப்படியான நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள் ஏற்பட்டதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்து அந்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்க உத்தரவிட்டுள்ளார். 


இலங்கை கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைவராக அர்ஜூனா ரணதுங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த இடைக்கால வாரியத்தில் ஓய்வுப்பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட 7 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்தியாவுக்கு எதிராக 302 ரன்க வித்தியாசத்தில் இலங்கை அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.