இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தமிகா நிரோஷனா. இவர் இலங்கை கிரிக்கெட் அணிக்காக 19 வயதுக்குட்பட்ட அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். இலங்கையின் அம்பலங்கோடாவில் உள்ள முன்னாள் முன்னாள் கிரிக்கெட் வீரர் கன்டமவாதாவிற்கு சொந்தமான வீட்டில் தமிகா நிரோஷனா தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தங்கி வந்துள்ளார்.


இலங்கை முன்னாள் கேப்டன்:


இந்த நிலையில், கடந்த செவ்வாய்கிழமை இரவு கிரிக்கெட் வீரர் நிரோஷனாவை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். இந்த கொடூர கொலையை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே நடந்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்த அந்த நாட்டு போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை சிறிய ரக கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த கொலையை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இந்த கோர சம்பவத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தமிகா நிரோஷனா இலங்கையின் சிறந்த ஆல்ரவுண்டராக திகழ்ந்துள்ளார்.


பிரபல வீரர்களை வழிநடத்தியவர்:


பதின்ம வயது கிரிக்கெட்டில் அதாவது 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் இவர் பிரபல இலங்கை கிரிக்கெட் வீரர்கள் பர்வேஸ் மகரூப், ஏஞ்சலோ மேத்யூஸ், உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமால் உள்ளிட்ட பலருக்கும் கேப்டனாக விளையாடியுள்ளார். தனிப்பட்ட காரணங்களால் 20 வயதிலே கிரிக்கெட்டில் இருந்து விலகிவிட்டார்.  மொத்தமாகவே 12 முதல்தர கிரிக்கெட் மற்றும் 8 லிஸ்ட் ஏ போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். இவர் 2001 மற்றும் 2004 காலகட்டத்தில் கிரிக்கெட் ஆடியுள்ளார். 2002ம் ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்ட உலகக்கோப்பையில் இலங்கை அணிக்கு கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார்.


சிறந்த ஆல்ரவுண்டரான இவர் தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் 300க்கும் மேற்பட்ட ரன்களையும், 19 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 2000ம் ஆண்டில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் அறிமுகமான தமிகா நிரோஷனா 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் வழிநடத்தியுள்ளார்.


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் கண்முன்னே சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.