Rohit Sharma: "என்ன செய்றதுனே தெரியல" - டி20 உலகக்கோப்பை பைனல் கடைசி 5 ஓவர் - மனம் திறந்த ரோகித்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கடைசி 5 ஓவரின்போது தனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா மனம் திறந்து பேசியுள்ளார்.

Continues below advertisement

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து நடத்திய டி20 உலகக்கோப்பையை இந்திய அணி ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் வென்று அசத்தியது. 2007ம் ஆண்டு முதல் டி20 உலகக்கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி வென்ற இரண்டாவது டி20 உலகக்கோப்பை இதுவாகும்.

Continues below advertisement

என்ன செய்வதென்றே தெரியவில்லை:

தென்னாப்பிரிக்கா அணியுடன் நடந்த இறுதிப்போட்டியில் கடைசி 5 ஓவர்களில் தென்னாப்பிரிக்கா வெற்றிக்கு வெறும் 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா வீசிய ஓவர்கள் ஆட்டத்தையே மாற்றி இந்திய அணியை வெற்றி பெற வைத்தது. ஹென்ரிக் கிளாசென், டேவிட் மில்லர் களத்தில் இருந்த நேரத்தில் வெற்றியை இந்திய அணி பெற்றது மிகவும் அசாத்தியமான ஒன்றாகவே கருதப்படுகிறது.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் ரோகித்சர்மா, இறுதிப்போட்டியின் திக் திக் தருணங்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “ தென்னாப்பிரிக்காவிற்கு 30 பந்துகளில் 30 ரன்கள் மட்டுமே தேவை என்று இருந்தபோது நாங்கள் மிகவும் அழுத்தத்தில் இருந்தோம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நான் அடுத்து நடக்கப்போவதை பார்க்கவில்லை. நான் மிகவும் அமைதியாக இருந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. எனக்கு மட்டுமின்றி அனைவருக்கும் அது முக்கியமாக இருந்தது. நாங்கள் எங்கள் திட்டத்தை செயல்படுத்தினோம்.

அமைதியாக ஆடினோம்:

கடைசி 5 ஓவர் நாங்கள் எந்தளவு அமைதியாக அந்த சூழலை கையாண்டோம் என்பதை காட்டுகிறது. நாங்கள் எங்கள் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினோம். என்ன நடக்கப்போகிறது என்பது பற்றி சிந்திக்கவில்லை. நாங்கள் பதற்றம் அடையவில்லை. அதுதான் எங்கள் பக்கம் இருந்த மிகவும் நல்ல விஷயம் ஆகும்."

இவ்வாறு அவர் கூறினார்.

 177 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கிளாசென் தனி ஆளாக சிக்ஸரையும், பவுண்டரியையும் விளாசி இந்திய அணிக்கு அச்சுறுத்தலை கொடுத்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, அக்‌ஷர் படேல் வீசிய 15வது ஓவரில் 24 ரன்களை விளாசினார். இதனால், ஆட்டம் தென்னாப்பிரிக்காவிற்கு சாதகமாக மாறியது.

ஆட்டத்தை மாற்றிய பும்ரா, பாண்ட்யா:

தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று முதல் உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, பும்ரா, அர்ஷ்தீப்சிங் மற்றும் பும்ரா வில்லனாக மாறினார்கள் என்றே சொல்ல வேண்டும். இந்திய அணியை அச்சுறுத்திய கிளாசெனை பாண்ட்யா அவுட்டாக்கினார். அவரது பந்தில் 27 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்ஸருடன் 52 ரன்களுடன் அதிரடி காட்டிக் கொண்டிருந்த கிளாசென் அவுட்டாகவுமே இந்தியாவிற்கு நிம்மதி பிறந்தது.

மறுமுனையில் கடைசி ஓவர் வரை நின்று அச்சுறுத்திக் கொண்டிருந்த டேவிட் மில்லரையும் பாண்ட்யா அவுட்டாக்கினார். இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்றது. இந்திய அணிக்காக 76 ரன்கள் எடுத்த விராட் கோலி ஆட்டநாயகன் விருது பெற்றார். பாண்ட்யா 3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டை வீழ்த்தினார். பும்ரா, அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அக்ஷர் படேல் 1 விக்கெட் எடுத்தார்.

Continues below advertisement