இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். சூதாட்ட புகாரில் சிக்கி தடை விதிக்கப்பட்ட பிறகு, சமீபத்தில்தான் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் திரும்பினார். 39 வயதான ஸ்ரீசாந்த் சமீபத்தில் ரஞ்சி கிரிக்கெட் போட்டிகளில் ஆடிக்கொண்டிருந்த நிலையில், தற்போது உள்ளூர் கிரிக்கெட் போட்டி உள்பட அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்தும்  ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.




இதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், இது எனக்கு கடினமான நாள். ஆனால், இது பிரதிபலிப்பு மற்றும் நன்றியுணர்வின் நாள். எர்ணாகுளம் மாவட்டத்தில் விளையாடுவது வித்தியாசமானது. லீக் மற்றும் போட்டி அணிகள், கேரள மாநில கிரிக்கெட் சங்கம், பி.சி.சி.ஐ., வார்விக்‌ஷையர் கவுண்டி கிரிக்கெட் அணி, இந்தியன் ஏர்லைன்ஸ் அணி, பி.பி.சி.எல். மற்றும் ஐ.சி.சி. ஆகியவற்றிற்கு விளையாடியுள்ளேன்.






ஐ.சி.சி. போட்டிகளில் ஆடியது மிகப்பெரிய கவுரவம். கிரிக்கெட் வீரராக எனது 25 ஆண்டுகால வாழ்க்கையில், எப்போதும் போட்டி, ஆர்வம் மற்றும் விடாமுயற்சி ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்துடன் நான் வெற்றிகளையும் பெற்றேன்.


எனது குடும்பம், எனது அணியினர் மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவது பெருமையாக உள்ளது. மிகுந்த வருத்தத்துடன் ஆனால் வருத்தமின்றி கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன், இந்திய உள்நாட்டு ( முதல் தர மற்றும் அனைத்து வடிவங்கள்) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன்.










அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொள்ள தேர்வு செய்துள்ளேன்.  இந்த முடிவு என்னுடையது மட்டுமே. எது எனக்கு மகிழ்ச்சியை தராது என்று எனக்கு தெரிந்தாலும், என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் இந்த முடிவு எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயல். ஒவ்வொரு கணத்தையும் நான் நேசித்தேன்.”






இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


ஸ்ரீசாந்த் 2005ம் ஆண்டு இலங்கை்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். அவர் இதுவரை 27 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 87 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிகபட்சமாக ஒரு டெஸ்டில் 99 ரன்களை விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 53 ஒருநாள் போட்டியில் ஆடி 75 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 10 டி20 போட்டிகளில் ஆடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 44 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 40 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.




கடைசியாக 2011ம் ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியிலும், 2011ம் ஆண்டு இலங்கை்கு எதிராக ஒருநாள் போட்டியிலும், 2008ம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டியிலும் கடைசியாக ஆடியிருந்தார். 2013ம் ஆண்டு தனது கடைசி ஐ.பி.எல். போட்டியில் ஆடியிருந்தார். சூதாட்டப் புகார் காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை 2013 முதல் தடையில் இருந்தது என்பதும், சமீபத்தில்தான் தடை நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.