மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்தாண்டும் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச டி20 தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் தொடரில் ஒருசில போட்டிகளில் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. 


தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, சூர்யகுமார் யாதவ் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை. இந்தநிலையில், சூர்யகுமார் யாதவுக்கு ஹெர்னியா நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்காக அவருக்கு ஆபரேஷன் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த குடலிறக்கம் காரணமாக சூர்யகுமார் யாதவ், ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாடவில்லை. அதேநேரத்தில் ஐபிஎல் 2024லிலும் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது. 


டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியின்படி, சூர்யகுமார் யாதவ் தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். குடலிறக்கம் காரணமாக சூர்யா, விரைவில் ஜெர்மனிக்கு செல்ல இருக்கிறார்.


இதுகுறித்து பிசிசிஐ வட்டாரம் தரப்பில், “சமீபத்தில் சூர்யகுமார் யாதவ் ஸ்போர்ட்ஸ் ஹெர்னியா நோயால் (குடலிறக்கம்) பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் அறுவை சிகிச்சை செய்ய ஜெர்மனியில் உள்ள மியூனிக் நகருக்கு செல்ல இருக்கிறார். இதன் காரணமாக, அவர் இந்த சீசனில் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக விளையாட மாட்டார். மேலும், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக முதல் சில போட்டிகளிலும் விளையாடமாட்டார்” என்று தெரிவிக்கப்பட்டது. 


மேலும், “ டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் நடைபெற உள்ளதால் சூர்ய குமார் யாதவ் குணமடைய போதுமான நேரம் வழங்கப்படும்.” என்றார்.


2022 ம் ஆண்டு இந்தியாவின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலும் குடலிறக்கத்தால் பாதிக்கப்பட்டார். அதற்காக அவர் அதே ஆண்டு ஜூலை மாதம் ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். ஐபிஎல் போட்டிக்கு பிறகு ராகுல் காயம் காரணமாக சில மாதங்கள் விளையாடவில்லை. 


விளையாட்டு குடலிறக்கம் என்றால் என்ன?


விளையாட்டு குடலிறக்கம் - அத்லெடிக் புபல்ஜியா மற்றும் கில்மோரின் இடுப்பு என்றும் அழைக்கப்படுகிறது. வயிற்றின் கீழ் பகுதியில் ஏதேனும் காரணத்தால் காயம் ஏற்பட்டால், அது நீண்ட நாட்களுக்கு பிறகு வலியை ஏற்படுத்தும். காயம் காரணமாக விளையாட்டு குடலிறக்கம் விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படுகிறது. அதன் ஆரம்ப அறிகுறி மார்பில் தீப்பிடித்து எரிவது போன்று உணர்வு ஏற்படும். இதன் காரணமாக அடுத்தடுத்த பகுதிகளிலும் வலி ஏற்பட்டு தொடங்கும். விளையாட்டு குடலிறக்கத்தை ஒரு பொதுவான குடலிறக்கத்தோடு ஒப்பிடக்கூடாது. இது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே ஏற்படும் நோயாகும். மருத்துவ அறிவியலின் மொழியில், விளையாட்டு குடலிறக்கம் "அத்லெடிக் புபல்ஜியா" என்று அழைக்கப்படுகிறது. குடலிறக்கம் மற்றும் விளையாட்டு குடலிறக்கத்தின் அறிகுறிகள் இயல்பானவை என்றாலும், அதன் ஆரம்ப அறிகுறிகளில் அடிவயிறு மற்றும் இடுப்பில் லேசான வலி அடங்கும். திசுக்கள் சேதமடையத் தொடங்கும். 


விளையாட்டு குடலிறக்கத்தை எவ்வாறு குணப்படுத்துவது?


குடலிறக்க நோயில், வயிற்றின் கீழ் பகுதியில் வலி தொடங்குகிறது. இது சரியான நேரத்தில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது தீவிரமான வடிவத்தை ஏற்படுத்த தொடங்கும். இதில், ஓய்வு, உடல் சிகிச்சை மற்றும் கார்டிகோஸ்டீராய்டுகள் ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்தலாம். விளையாட்டு குடலிறக்கம் அறுவை சிகிச்சை இல்லாமல் கூட குணப்படுத்த முடியும். ஆனால் குடலிறக்கம் ஒரு தீவிர வடிவத்தை எடுத்திருந்தால், அறுவை சிகிச்சை செய்வது மிகவும் முக்கியம். நோயாளிக்கு நீண்ட காலமாக வலி இருந்தால், கட்டாயமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். 


விளையாட்டு குடலிறக்கத்திலிருந்து மீள எவ்வளவு நேரம் ஆகும்?


விளையாட்டு குடலிறக்கம் குணமடைய நீண்ட நாட்கள் ஆகலாம். நவீன சிகிச்சையின் மூலம், அதன் அறிகுறிகளை 6-8 வாரங்களில் சரி செய்யலாம் என்றும், குடலிறக்கத்திலிருந்து மீண்ட பிறகு, வீரர்கள் 6-12 வாரங்களுக்குள் குணமடைந்து விளையாடலாம்.