உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரானது  சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, தர்மசாலா, லக்னோ உள்ளிட்ட 10 நகரங்களில் இந்த போட்டி நடைபெறுகிறது. கிரிக்கெட் திருவிழாவை காண உலகம் முழுவதுமிருந்து ரசிகர்கள் இந்தியா வருகை தந்த வண்ணம் உள்ளனர். 


2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்றுள்ளது.  லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற 9 அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்த முறை இந்தியா கோப்பை கைப்பற்றும் என ரசிகர்கள் பலரும் கணித்துள்ளனர். 


இப்படியான நிலையில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை (அக்டோபர் 7) எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. ஏற்கனவே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்துவிட்ட நிலையில், பாதுகாப்பு பணிக்காக 2 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கிரிக்கெட் போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி போக்குவரத்து  மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 


அதன்படி விக்டோரியா ஹால் ரோடு, காமராஜர் சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா சாலை ஆகிய பகுதிகளில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொண்டு போலீசாருக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு புறநகர் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ”சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8, 13, 18, 23,27 ஆகிய தேதிகளில் சிந்தாதிரிப்பேட்டை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.