தென்னாப்பிரிக்கா-இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 327 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 197 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதன்பின்பு இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 94 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது. இதைத் தொடர்ந்து ஐந்தாவது நாளான இன்று தென்னாப்பிரிக்கா அணி 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


 


இந்நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் புகைப்படங்களை எடுத்து கொண்டனர். அதன்பின்பு ரவிச்சந்திரன் அவின், புஜாரா,முகமது சிராஜ் நடனமாடியுள்ளனர். இதுதொடர்பான வீடியோவை ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “எப்போதும் போட்டி முடிந்த பிறகு புகைப்படம் எடுப்பது மிகவும் சலிப்பை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் வழக்கத்திற்கு மாறாக முதல் முறையாக புஜாரா நடனம் ஆடினார். அவருடன் சேர்ந்து சிராஜூம் நடனம் ஆடினார். இது மிகவும் மறக்க முடியாத தருணமாக அமைந்து” எனக் கூறியுள்ளார். இந்த வீடியோவை தற்போது வரை பலரும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர். அத்துடன் தங்களுடைய கருத்துகளையும் பதிவிட்டு வருகின்றனர்.  


 






வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். 2018ஆம் ஆண்டு ஜோகனிஸ்பேர்கில் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்றது. அதன்பின்னர் தற்போது 2021-22 தொடரில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி மீண்டும் செஞ்சுரியன் போட்டியில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதும் மழை காரணமாக ரத்தானது. அப்படி இருக்கும் போது வெறும் 4 நாட்களில் இந்திய அணி டெஸ்ட் போட்டியை வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ஸ்பீடு ஸ்பீடு... அசுரன் பூம் பூம் பும்ராவின் லேட்டஸ்ட் சாதனை..