இந்தியா - தென்னாப்பிரிக்கா:


இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிய ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 5-0 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது.


இதனை அடுத்து ஜூன் மற்றும் ஜூலை மாதம் நடைபெற உள்ள போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி. அதன்படி 3 ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் விளையாடுகின்றன. 


அட்டவணை:


இதில் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டிகள் பெங்களூருவில் உள்ள சின்னஸ்வாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து மீதம் உள்ள ஒரு டெஸ்ட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. அதாவது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில்தான் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி ஜூன் மாதம் 28 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.


அதேபோல் ஒரு நாள் போட்டிகளை பொறுத்தவரை முதல் போட்டி ஜூன் 16 ஆம் தேதியும், இரண்டாவது ஒரு நாள் போட்டி 19 ஆம் தேதியும், மூன்றாவது ஒருநாள் போட்டி 23 ஆம் தேதியும் தொடங்குகிறது. டி20 போட்டியைப் பொறுத்தவரை முதல் போட்டி ஜூலை 5 ஆம் தேதியும், இரண்டாவது போட்டி ஜூலை 7 ஆம் தேதியும், மூன்றாவது மற்றும் இறுதிப் போட்டி ஜூலை 9 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.


48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறை டெஸ்ட் போட்டி:


1976-க்குப் பிறகு முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய மகளிர் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. மகளிர் கிரிக்கெட் அணிகளின் கடைசி டெஸ்ட் போட்டி 1976 ஆம் ஆண்டு தான் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது.


6 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்து, இந்த போட்டி டிராவில் முடிந்தது. சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 


மூன்றாவது முறையாக நேருக்கு நேர்:


மகளிர் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மூன்றாவது முறையாக நேருக்கு நேர் மோதுகின்றன. முன்ந்தாக முதல் போட்டி மார்ச் 2002 இல் நடைபெற்றது, இதில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நவம்பர் 2014 இல் நடைபெற்றது, இதில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் மூன்றாவது முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நேருக்கு நேர் மோத உள்ளது.