இந்திய தொடருக்கு பிறகு தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான 14 பேர் கொண்ட தென்னாப்பிரிக்கா அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில், ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், தென்னாப்பிரிக்கா அணிக்காக இதுவரை ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடாத 27 வயதான இடது கை பேட்ஸ்மேன் நீல் பிராண்ட் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணியில் ஏழு புதிய முகங்கள்:
இந்த தொடரில் கேப்டன் நீல் பிராண்டை மட்டுமல்லாது ரெனார்ட் வான் டோண்டர், ருவான் டி ஸ்வார்ட், மிஹாலலி மபோங்வானா, ஷேபோ மோரேகி, ஷுவான் வான் பெர்க் மற்றும் விக்கெட் கீப்பர் கிளைட் ஃபோர்டுயின் ஆகியோர் இந்த தொடரில் இந்திய அணிக்காக புதிதாக களமிறங்க இருக்கின்றனர்.
நீல் பிராண்ட் கேப்டனாக நியமனம் - யார் இவர்..?
நியூசிலாந்து தொடருக்கான கேப்டனாக நீல் பிராண்டை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் நியமித்துள்ளது. நீல் பிராண்ட் தென்னாப்பிரிக்கா அணிக்காக முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் களமிறங்கி அறிமுக போட்டியிலேயே கேப்டனாக செயல்பட இருக்கிறார். 27 வயதான நீல் பிராண்ட் இதுவரை 51 முதல்தர போட்டிகளில் விளையாடி 6 சதங்கள், 20 அரைசதங்கள் உள்பட 2906 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், தனது இடது கை சுழல் பந்துவீச்சு மூலம் 72 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்த தென்னாப்பிரிக்க அணியில் மூன்று வீரர்கள் மட்டுமே உள்ளனர். 1995ல் லீ ஜெர்மைனுக்கு பிறகு டெஸ்ட் அறிமுகத்தில் சர்வதேச ஆண்கள் அணியை வழிநடத்தும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் நீல் பிராண்ட். தற்போது அறிவிக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணியில் டுவான் ஆலிவியர் மட்டுமே மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். இவர் இதுவரை தென்னாப்பிரிக்கா அணிக்காக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் களமிறங்கும் முக்கிய வீரர்கள்:
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் டேவிட் பெடிங்ஹாம் மற்றும் கீகன் பீட்டர்சன் ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மார்க்ரம் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் அனைவரும் தென்னாப்பிரிக்காவில் ஜனவரி - பிப்ரவரி மாதம் நடைபெறும் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் விளையாடவுள்ளனர். இந்த தென்னாப்பிரிக்கா டி20 லீக்கானது வருகின்ற ஜனவரி 10 முதல் தொடங்குகிறது.
தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பிப்ரவரி மாதம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. முதல் போட்டி பிப்ரவரி 4ம் தேதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 13ம் தேதியும் நடக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி:
நீல் பிராண்ட் (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், க்ளைட் ஃபோர்டுயின், ஜுபைர் ஹம்சா, ருவான் டி ஸ்வார்ட், ஷேபோ மோரேகி, மிஹாலலி மபோங்வானா, டுவான் ஆலிவர், டேன் பேட்டர்சன், கீகன் பீட்டர்சன், டேன் பீட், ரெனார்ட் வான் டோண்டர், ஷான் வான் பெர்க், கயா சோண்டோ.