இந்தியா - தென்னாப்பிரிக்கா:


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது.  


போட்டியை தட்டிப்பறித்த கூட்டணி:


முன்னதாக, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களை சோதித்த டேவிட் பெடிங்காம் மற்றும் டீன் எல்கர் கூட்டணி, இந்திய அணியின் கையிலிருந்த போட்டியை தட்டிப்பறித்தது. 113 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இருந்தபோது இந்த கூட்டணி 4வது விக்கெட்டுக்கு 131 ரன்கள் சேர்த்தது. எல்கருடன் பார்ட்னர்ஷிப் போட்ட பெடிங்காம், 87 பந்தில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 56 ரன்கள் எடுத்து நல்ல இன்னிங்ஸை பதிவுசெய்தார். அதன்பின் 408 ரன்களை குவித்த தென்னாப்பிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.


கோலியும், ரோகித்தும் தான் காரணம்:


இந்நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் பெடிங்காம், தன்னுடைய பேட்டிங் முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாதான் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், ”எனக்கு பிடித்த இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்கள் என்றால் அது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மட்டும்தான். நான் என்னுடைய 13 வயது முதல் 18 வயதிற்குள் இருந்தபோது, ​​​​முன்னாள் வீரர்கள் ஜேக் காலிஸ் மற்றும் கிப்ஸின் பேட்டிங் டெக்னிக்கைதான் பின்பற்ற முயற்சித்தேன்.


ஆனால் அது எனக்கு பலனளிக்கவில்லை. அதன்பிறகு என்னுடைய பேட்டிங்கில் நான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் டெக்னிக்கை பின்பற்ற ஆரம்பித்தேன். பிறகு எல்லாம் சிறப்பாக அமைந்தது” என்று கூறியுள்ளர்.


மேலும் படிக்க: Sachin Tendulkar: "தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக டெண்டுல்கர்தான் வல்லவர்" முன்னாள் ஜாம்பவான் ஆலன் டொனால்ட் புகழாரம்


 


மேலும் படிக்க: India cricket team schedule: 2024 ஆம் ஆண்டில்... இந்திய அணி விளையாடும் போட்டிகள் இது தான்... விவரம்!