தென்னாப்பிரிக்காவில் இந்திய அணி:


இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மெற்கொண்டு வருகிறது. அதன்படி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 3 டி20 போட்டிகள், கே.எல்.ராகுல் தலைமையில் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி முடித்துள்ளது. இதில், டி20 போட்டிகள் சமநிலை பெற்றது.


ஒருநாள் போட்டியை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இச்சூழலில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்க அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனிடையே, இரு அணிகளும் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. 


மோசமான சாதனை:


முன்னதாக இந்த தோல்வி மூலம் இதுவரை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் இந்திய அணி வென்றதேயில்லை என்ற மோசமான சாதனையுடன் தொடர்கிறது இந்திய அணி. அதேபோல், சொந்த  மண்ணில் நடைபெறும் போட்டியில் கடந்த 31 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க அணி தான் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியை ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 


சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான்:



இந்நிலையில் தென்னாப்பிரிக்க மண்ணில் சிறப்பாக விளையாடிய ஒரேயொரு வீரர் சச்சின் டெண்டுல்கர்தான் என்றும், தற்போதைய இந்திய அணி வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் எப்படி விளையாட வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் ஆலன் டொனால்ட் தெரிவித்துள்ளார்.


நினைத்ததை போல் பந்து வீச வைப்பார்:


இது தொடர்பாக ஆலன் டொனால்ட் பேசுகையில், ”டெண்டுல்கர் மட்டும்தான். மிடில்-ஸ்டம்பில் நின்று விளையாடியவர். தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்களை அவர் நினைத்ததுபோல பந்துவீச வைப்பதில் வல்லவர். ஆடுகளத்தில் முன்னேறி வந்து விளையாடி, பந்துவீச்சாளர்கள் மீது அழுத்தம் போட்டு நினைத்த இடத்தில் வீசவைப்பார். அதேபோல அடிக்கவேண்டிய பந்தை மட்டும் அடித்து, மற்றபந்துகளை அற்புதமாக விட்டுவிடுவார்.


இந்த ஆடுகளத்தில் உங்கள் ஷாட்களை கவனமாக விளையாடினால், நீங்கள் ரன்களை எளிதாக எடுக்கலாம். பந்து வீச்சாளர்களை உங்களிடம் வர வைப்பதும், பந்துகளை அடிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதும் முக்கியமானது. கேப்டவுன் பேட்டிங் செய்வதற்கு சவாலான ஆடுகளமாகும், இருப்பினும் இது ஒரு சுவாரஸ்யமான போட்டியாகவே இருக்கும். பந்துவீச்சை பொறுத்தவரை கேப்டவுன் முதலில் ஒரு சிறந்த டெஸ்ட் ஆடுகளத்தை கொண்டிருக்கும், பின்னர் அது விரைவில் தட்டையாகிவிடும். எனவே நீங்கள் போட்டியில் நிலைத்திருக்க கடினமாக உழைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். 


 


மேலும் படிக்க: India cricket team schedule: 2024 ஆம் ஆண்டில்... இந்திய அணி விளையாடும் போட்டிகள் இது தான்... விவரம்!


 


மேலும் படிக்க: MS Dhoni: "ஒரு முறை கூட முடியல" தோனியிடம் எடுபடாத ஜாம்பவான் நாதன் லயனின் பவுலிங்!