இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. வெற்றி இலக்கை கடைசி வரை மன உறுதியுடன் போராடி வெற்றி பெற்றது.
2வது ஒருநாள் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் வென்றது. இதனைத் தொடர்ந்து ஒருநாள் போட்டியானது நடந்து வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி கடைசி வரை போராடி தோற்றது. 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
பட்டாசாய் வெடித்த ருத்துராஜ், விராட் கோலி
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 14 ரன்களிலும், யசஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனையடுத்து களம் கண்ட விராட் கோலி மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் இருவரும் தென்னாப்பிரிக்கா பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தது. அதுமட்டுமல்லாமல் இருவரும் சதமடித்தனர். ருத்துராஜ் 105 ரன்களிலும், விராட் கோலி 102 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
பின்னர் களம் கண்ட கேப்டன் கே.எல்.ராகுல் 66 ரன்கள் குவித்தார். இதனால் 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. தென்னாப்பிரிக்கா தரப்பில் பந்து வீச்சில் அதிகப்பட்சமாக மார்கோ ஜென்சன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
போராடிய தென்னாப்பிரிக்கா அணி
இப்படியான நிலையில் தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியில் தொடக்க வீரர் குயிண்டன் டி காக் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எய்டன் மார்க்ரம் 108 ரன்கள் குவித்தார். தொடர்ந்து களம் கண்ட கேப்டன் தெம்பா பவுமா 46 ரன்களிலும், மேத்யூ பிரீத்கே 68 ரன்களிலும், டெவால்ட் பிரேவிஸ் 54 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த வீரர்களின் பங்களிப்பு தென்னாப்பிரிக்கா அணி வெற்றியை நோக்கி பயணிக்க காரணமாக அமைந்தது. அந்த அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இந்திய அணி தரப்பில் அதிகப்பட்சமாக பிரசித் கிருஷ்ணா, அர்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 என்ற சமநிலையில் உள்ளது. கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 6ம் தேதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.