ஐசிசி உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி புள்ளிப்பட்டியலில், மூன்றாவது இடத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. 


இந்நிலையில், தாங்கள் முதலில் பேட்டிங் செய்த நான்கு போட்டிகளிலும் 300 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை செய்துள்ளது.


சதம் அடித்த மூன்று வீரர்கள்:


அதன்படி, கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்க அணி. முன்னதாக, அந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.


இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்களை குவித்தது. 


அந்த போட்டியில், தென்னாப்பிரிக்க அணியின் மூன்று வீரர்கள் சதம் அடித்தனர். குயின்டன் டி காக் 84 பந்துகளில் 100 ரன்களும், ராஸ்ஸி வான் டெர் டுசென் 110 பந்துகளில் 108 ரன்களும், ஐடன் மார்க்ராம் 54 பந்துகளில் அதிரடியாக 13 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 106 ரன்கள் எடுத்தனர்.  


மேலும் இந்த போட்டியில் அந்த அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் தென்னாப்பிரிக்க அணி  மோதியது. டாஸ்  வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 311 ரன்களை குவித்தது. அந்த போட்டியில் குயின்டன் டி காக் 106 பந்துகளில் 109 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்க அணி இந்த போட்டியில் 134 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி:


கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து  அணியை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்க அணி. இந்த போட்டியிலும் முதலில் களமிறங்கிய அந்த அணி 50 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.இங்கிலாந்து அணியை இந்த போட்டியில் 229 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வீழ்த்தியது.


இதில், தென்னாப்பிரிக்க வீரர் ஹென்ரிச் கிளாசென் 67 பந்துகளில் 109 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


ருத்ர தாண்டவமாடிய டி காக்:


இந்நிலையில், இன்று (அக்டோபர் 24) வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 382 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்க அணி. 


இன்றைய போட்டியிலும் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் சதம் அடித்தார். 140 பந்துகள் களத்தில் நின்ற அவர், 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என மொத்தம் 174 ரன்களை குவித்தார்.


இந்த உலகக் கோப்பையில், 5 போட்டிகளில் விளையாடி உள்ள குயின்டன் டி காக் மூன்று சதங்களை அடித்துள்ளார். மேலும், உலகக் கோப்பை தொடரில் 400 ரன்களை கடந்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.


மேலும் படிக்க: PAK vs AFG: பாகிஸ்தானின் தோல்விக்கு வில்லனே பாபர் அசாம்தான்.. எப்படி தெரியுமா..? இதில் தெரிந்து கொள்ளுங்கள்!


மேலும் படிக்க: Pak vs Afg: அன்பு வேணுமா இருக்கு, வெற்றி வேணுமா இருக்கு: இரு அணிகளையும் கொண்டாடிய சென்னை ரசிகர்கள்!