உலகக் கோப்பை 2023ல் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய வீரர்களுக்கு பிசிசிஐ சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 5 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் ஒரு சில விஷயங்களை இந்திய வீரர்கள் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக தரம்ஷாலாவில் ஐந்தாவது போட்டியை விளையாடி அதிலும் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்திய அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகின்ற அக்டோபர் 29, (ஞாயிற்றுக்கிழமை) இங்கிலாந்துக்கு எதிராக அடுத்த போட்டியில் விளையாட இருக்கிறது. இந்நிலையில், தர்மசாலாவில் இந்திய அணிக்கு இரண்டு நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், தரம்ஷாலாவில் மலையேற்றம் முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளதாக இந்திய அணி நிர்வாகம் வீரர்களுக்குத் தெரிவித்துள்ளது. இரண்டு நாள் இடைவேளையின் போது அவர்களால் மலையேற முடியாது. இருப்பினும், இந்த இடைவேளையின் போது இந்திய வீரர்கள் தர்மசாலாவில் உள்ள அற்புதமான காட்சிகளை முழுமையாக அனுபவிக்கலாம். அதேபோல், இந்திய வீரர்கள் பாராகிளைடிங் செய்யவும் பிசிசிஐ தடை விதித்துள்ளது.
இதுகுறித்து 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், “டிரெக்கிங் செல்ல முடியாது என வீரர்களுக்கு அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், எந்தவொரு இந்திய வீரரும் போட்டியின் போது பாராகிளைடிங் செய்ய முடியாது. ஏனெனில் அது வீரரின் ஒப்பந்தத்திற்கு எதிராக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி:
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி ஆறாவது போட்டியில் விளையாடுகிறது. இதன் காரணமாக இந்திய அணி வருகின்ற அக்டோபர் 25 (புதன்கிழமை) லக்னோவை அடையும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன் விளையாடிய 5 ஆட்டங்களில் தோல்வியை சந்திக்காத இந்திய அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஒரே அணியாகவும் இந்திய அணி திகழ்கிறது.
ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அணியில் இரண்டு மாற்றங்கள் இருந்தது. ஹர்திக்கிற்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பிடித்தார். அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டார். இத்தகைய சூழ்நிலையில், ஹர்திக் திரும்பிய பிறகு விளையாடும் லெவனில் இருந்து யார் நீக்கப்படுவார்கள் என்ற கேள்வி உள்ளது. உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ரோஹித் சர்மாவின் தேர்வை கடினமாக்கியுள்ளார் ஷமி.
அடுத்த போட்டி லக்னோவில் நடைபெறவுள்ளது. அங்கு சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்ச் இருக்கும் என்பதால், இப்படிப்பட்ட சூழ்நிலையில் அஸ்வின் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இதுவரை எப்படி இந்திய அணி..?
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 5 போட்டிகளிலும் ரன்களை விரட்டி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் ரன்களை விரட்டிய இந்தியா, ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும், 3வது போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், நான்காவது போட்டியில் வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்திலும், ஐந்தாவது போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.