அன்றே விதை போட்டவர்..


கடந்த 2000-ஆம் ஆண்டு சூதாட்ட சர்ச்சையில் இந்தியா சிக்கி தவித்த போது கேப்டனாக பொறுப்பேற்ற அவர் தனது அதிரடியான முடிவுகள் நிறைந்த கேப்டன்ஷிப் வாயிலாக வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி உட்பட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து இந்தியாவிற்கு பல வெற்றிகளை தேடி கொடுத்து வெற்றிப் பாதையில் நடக்க வைத்து இன்றைய தரமான இந்திய அணிக்கு அன்றே விதை போட்டவர். 2008இல் ஓய்வு பெற்ற அவர் அதன்பின் ஐபிஎல் தொடரில் சில காலங்கள் விளையாடி அதிலும் ஓய்வு பெற்று பின்னர் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார்.


பிசிசிஐ தலைவர்


இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி கடந்த 2019ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டின் தலைவராக போட்டியின்றி அவர் பொறுப்பேற்றபோது அத்தனை இந்திய ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏனெனில் களத்தில் இந்திய கிரிக்கெட்டை தனது சிறப்பான முடிவுகளால் வளப்படுத்திய அவர் கிரிக்கெட் வாரியத்தையும் மிகச் சிறப்பாக நிர்வகித்து இந்திய கிரிக்கெட்டுக்கு பல நன்மைகளை செய்வார் என அனைவரும் நம்பினர்.



தைரியமான முடிவுகள்


அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இந்தியாவை பகலிரவு டெஸ்ட் விளையாட வைத்தது, உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்தியது, என பல தைரியமான முடிவுகளை எடுத்தார். இருப்பினும் நீண்ட நாட்களாக கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி சமீபத்தில் கேப்டன் பதவியில் இருந்து விலகியதில் அவரின் பெயர் சர்ச்சையாக மாறியது. ஆனாலும் விராட் கோலி 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது அவருக்கு நேரில் சென்று கங்குலி வாழ்த்து தெரிவித்தது அவை அனைத்தும் வதந்தி என்று காட்டியது.


புதிய வீடு


எது எப்படி இருந்தாலும் தொடர்ச்சியாக பிசிசிஐ தலைவராக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் தற்போது மிகப்பெரிய தொகையில் புதிதாக ஒரு சொகுசு பங்களா போன்ற வீட்டை வாங்கியுள்ளார். பிறந்தது முதல் இதுநாள் வரை பெஹளா பகுதியில் வசித்து வந்த அவர் தற்போது மத்திய கொல்கத்தா பகுதியில் சுமார் 16992 சதுர அடிகள் பரப்பளவிலான மிகப்பெரிய வீட்டை சுமார் 40 கோடிகள் கொடுத்து வாங்கியுள்ளார்.






குடும்பத்தினர் பெயரில் வாங்கினரா?


இந்த வீட்டிற்கு அவரின் மனைவி மகள் மற்றும் தாய் ஆகியோரும் துணை உரிமையாளர்களாக பதிவிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த பகுதியில் இருக்கும் மக்கள் கங்குலி போன்ற ஒரு நட்சத்திரம் தங்களது பகுதிக்கு குடியேறுவதால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறுகின்றனர். அதேசமயம் இந்த வீடு தனது உறவினர்களுக்காக அவர் வாங்கியுள்ளதாகவும் தெரிவதால் அங்கு அவர் குடும்பத்தினருடன் குடிப்பெயர்ந்த பின்பு தான் அந்த செய்தி முழுமையாக உண்மை என நம்பலாம் என்று அறிய முடிகிறது. அந்த வீடு லோவேர் ராடோன் பகுதியில் மிகவும் அமைதியான சூழ்நிலையில் காற்றோட்டத்துடன் நிறைந்த பகுதியில் உள்ளதாக தெரிகிறது. தற்போது புதிய வீடு வாங்கினாலும் கூட பிறந்தது முதல் 48 வருடங்கள் வாழ்ந்த பழைய வீட்டைப் பிரிவது மனதிற்கு கடினமான ஒன்றாக இருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.