சவுரவ் கங்குலியுன் பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு முன்னதாக ஐபிஎல் தலைவர் பதவி வழங்கப்பட்டதாகவும் ஆனால் அவர் அதனை நிராகரித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்,  பிசிசிஐ தலைவராக இருக்கும் சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிவடையும் நிலையில், அவருக்கு  பதிலாக அந்தப் பதவியில் ரோஜர் பின்னி வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நியமிக்கப்படுவார் என முன்னதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், கங்குலிக்கு ஐபிஎல் தலைவர் பதவியை வழங்க பேச்சுவார்த்தை நடந்ததாகவும் ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்தார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


முன்னதாக டி20 உலககோப்பை தொடருக்குப் பிறகு சவுரவ் கங்குலி ஐசிசியின் தலைவர் ஆகவிருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஐசிசி தலைவர் பதவிக்கு கங்குலியை பிசிசிஐ ஆதரிக்காது என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


 






பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 18ம் தேதியுடன் முடிவடைகிறது.


பிசிசிஐ நிரிவாகிகளின் பதவிக்காலம் முடிந்த உடனேயே, அவர்களால் அந்த பதவிகளில் தொடர முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே, அவர்கள் மீண்டும் அந்த பதவியில் தொடரும் வகையில் விதி உள்ளது. இதை மாற்றி அமைக்கும் வகையில், முன்னதாக பிசிசிஐ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


பிசிசிஐயின் தலைவராக உள்ளவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் இடக்கை பேட்ஸ்மேனுமான சவுரவ் கங்குலி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து இந்தியத் தலைமைக் கிரிக்கெட் ஆணையத்தின் தலைவராக பதவி வகித்து வருகிறார்.


இச்சூழலில்1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னி அடுத்த பிசிசிஐ தலைவராகலாம் எனும் தகவல்கள் வெளிவந்துள்ளன.


67 வயதான ரோஜர் பின்னி கடந்த 1979-87 வரை டெஸ்ட் போட்டிகள் விளையாடி 47 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். அதேபோல், 1980-87 வரை 72 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 77 விக்கெட்கள் கைப்பற்றியுள்ளார். 


அதிலும், முக்கியமாக 1983 உலகக் கோப்பையில் ரோஜர் பின்னி 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்களை வீழ்த்தினார். (சிறந்த பந்துவீச்சு 4-29) இதையடுத்து உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை ரோஜர் பின்னி படைத்தார். 


இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் துணை தலைவராக ராஜீவ் சுக்லாவும், செயலாளராக ஜெய்ஷாவும் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.