இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு கெளதம் கம்பீரை நியமிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் பிசிசிஐ தலைவரான சௌரவ் கங்குலி எச்சரிக்கும் வகையில் சூசகமாக தன் கருத்தை கூறி இருக்கிறார்.
கே.கே.ஆர் அணியை வெல்ல வைத்த கம்பீர்:
கடந்த ஐபிஎல் சீசன் 17ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டவர் கெளதம் கம்பீர். அதன்படி தன்னுடைய ஆலோசனையின் மூலம் அந்த அணி வீரர்களை விளையாட வைத்து ஐபிஎல் சாம்பியன் பட்டத்தையும் வெல்ல வைத்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் கோப்பையை வென்று அசத்தியது.
வீரர்களின் பங்களிப்பு இதற்கு முக்கிய காரணமாக இருந்தாலும் கம்பீர் பெயர் தான் அதிகம் உச்சரிக்கப்பட்டது. அதற்கேற்றார் போல் அவரும்,”நான் சிரிப்பதை பார்க்க இங்கு யாரும் வரவில்லை. மாறாக போட்டி முடிவில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பார்க்கவே இங்கே ரசிகர்கள் வருகிறார்கள்” என்று கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் சாம்பியன் பட்டத்தையும் மூன்றாவது முறையாக வென்று அசத்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.
இச்சூழலில் தான் கங்குலி ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “ஒரு பயிற்சியாளர் உடைய முக்கியத்துவம் என்னவென்றால் அவரது வழிகாட்டுதல் மற்றும் பயிற்சிகளின் மூலம் ஒரு வீரரின் வாழ்க்கையை, எதிர்காலத்தை மாற்ற முடியும். களத்திலும், வெளியிலும் இதை செய்ய முடியும். எனவே, எந்த ஒரு நிர்வாகமும் அதன் பயிற்சியாளரை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.
பிசிசிஐ கம்பீரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் கங்குலி சூசகமாக இதனை எதிர்க்கிறார் என்று ரசிகர்கள் கூறியிருக்கின்றனர்.
அது வேறு இது வேறு:
இந்நிலையில் தான் இந்திய அணியின் பயிற்சியாளராக கெளதம் கம்பீரை நியமிப்பது குறித்து பேசியிள்ளார் கங்குலி. இது தொடர்பாக அவர் பேசுகையில், “கம்பீர் ஆர்வமாக இருக்கிறார். நேர்மையானவராக இருக்கிறார். அவர் பயிற்சியாளர் பதவிக்கு ஒரு நல்ல தேர்வு தான். ஆனால், ஒரு ஐபிஎல் அணிக்கு ஆலோசகராக அல்லது பயிற்சியாளராக இருப்பதும், இந்திய அணி போன்ற உலகின் முன்னணி அணி ஒன்றிற்கு பயிற்சியாளராக இருப்பதும் வேறு. இரண்டிற்கும் வித்தியாசம் உள்ளது.
நிச்சயம் இது கவுதம் கம்பீருக்கு தெரியும். அவர் இதை உணர்ந்து இருப்பார் என்று நினைக்கிறேன். அவருக்கு விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற நட்சத்திரங்களை எப்படி கையாள்வது என்பது விரைவில் தெரியும். இந்திய அணியின் சூழ்நிலைக்கேற்ப அவர் தன்னை மாற்றிக் கொள்வார். உங்கள் சொந்த எண்ணங்களை திணிப்பது மட்டுமே பயிற்சியாளர் பணி அல்ல. இதை அவர் புரிந்து கொண்டு அணியை வழிநடத்துவார் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார் கங்குலி.