இந்திய உள்ளூர் அணிகள் மோதும் டி20 தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பையை முதல் முறையான வென்று ஜார்க்கண்ட் அணி அசத்தியுள்ளது, இறுதிப்போட்டியில் ஹரியானா அணியை 69 ரன்கள் வீழ்த்தியது
SMAT இறுதிப்போட்டி:
சையத் முஷ்டாக் அலி டிராபி 2025 இறுதிப் போட்டியில், ஹரியானா கேப்டன் அங்கித் குமார் டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தார். ஜார்கண்ட் தொடக்க வீரர் விராட் சிங்கை அன்ஷுல் காம்போஜ் முதல் ஓவரிலேயே 2 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். பின்னர் இஷான் கிஷானும் குமார் குஷாக்ராவும் இரண்டாவது விக்கெட்டுக்கு 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்
இஷன் கிஷான் சாதனை:
இந்த போட்டியில் ஜார்க்கண்ட் அணி கேப்டன் இஷான் கிஷன் 49 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், இஷான் கிஷன், சையத் முஷ்டாக் அலி டிராபி 2025 இல் 500 ரன்களை எட்டிய முதல் வீரர் ஆனார். அவர் 10 இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரை சதங்கள் உட்பட 517 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் திரிபுராவுக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்தார்
ஜார்கண்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது. மேலும் சையது முஷ்டாக் அலி கோப்பையில் சதமடித்த முதல் கேப்டன் என்கிற சிறப்பையும் இஷான் கிஷன் பெற்றார்.
ஹரியானா தோல்வி:
ஜார்கண்ட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் விகாஷ் சிங் ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தார், முதல் ஓவரிலேயே கேப்டன் அங்கித் குமார் மற்றும் ஆஷிஷ் சிவாச்சை ஆட்டமிழக்கச் செய்தார். இருவரு, டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். பின்னர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் யஷ்வர்தன் தலால் மற்றும் அர்ஷ் கபீர் விவேக் ஆகியோர் சரிவில் இருந்து மீட்க போராடினார், ஆனால் அவர்களின் பார்ட்னர்ஷிப் விரைவில் முடிந்தது. சுஷாந்த் மிஸ்ராவின் பந்துவீச்சில் அர்ஷ் ஆட்டமிழந்தார்,
நான்காவது விக்கெட்டுக்கு யஷ்வர்தனும் நிஷாந்த் சிந்துவும் 67 ரன்கள் சேர்த்தனர், அந்த பார்ட்னர்ஷிப்பை அனுகுல் ராய் முறியடித்தார். 10வது ஓவரின் முதல் பந்தில் சிந்துவை (31) அனுகுல் வெளியேற்றினார், அதே ஓவரின் நான்காவது பந்தில் யஷ்வர்தன் தலால் (53) வெளியேற்றினார். அதன் பிறகு, ஹரியானா தோல்வி உறுதியானது.
69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சமந்த் தேவேந்தர் ஜாகர் 17 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து, நான்கு சிக்ஸர்களுடன் சிறிது போராடினார். ஆனாலும் அவரும் ஆட்டமிழந்தார், இறுதியில் ஹரியானா அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இஷான் கிஷான் தலைமையிலான ஜார்கண்ட், சையத் முஷ்டாக் அலி டிராபி இறுதிப் போட்டியில் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ஜார்கண்டின் முதல் SMAT பட்டமாகும்.