Inzamam UL Haq: இந்தியாவில் நடந்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023ல் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை தேர்வாளர் பதவியில் இருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் விலகியுள்ளார். இன்சமாம் தனது ராஜினாமா கடிதத்தை பிசிபியின் தலைவர் ஜகா அஷ்ரப்பிற்கு அனுப்பியதாக பல பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி கடைசியாக விளையாடிய நான்கு லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது. அரையிறுதிக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றாலுமே, மற்ற போட்டிகளின் முடிவுகளை சார்ந்தே அந்த அணியின் அரையிறுதி வாய்ப்புகள் உள்ளது. இதனால் கேப்டன் பாபர் அசாமிற்கு மட்டுமின்றி, தேர்வுக்குழு தலைவரான இன்சாமாமிற்கும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் தான், இன்சமாம் உல் ஹக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


நிதிச் சிக்கல்:


தலைமை தேர்வாளராக இருந்த இன்சமமின் ஒப்பந்தத்தை  ரத்து செய்வது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு கூடுதல் நிதிச்ச்சுமையை ஏற்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ஊடகங்களில் இருந்து வெளிவரும் தகவல்களின்படி, இன்சாமாமின் பதவிக்காலம் முடியும் முன்பே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், பாகிஸ்தான் கிரிக்கெட்ர் வாரியம் அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 15 மில்லியன் டாலர்களை அவருக்கு கொடுக்க வேண்டி இருக்கும்.  இது ஆறு மாதங்களுக்கு ஒதுக்கப்படும் 2.5 மில்லியன் மாத சம்பளத்திற்கு சமமாகும்.






5 பேர் கொண்ட குழு:


ஏற்கனவே உலகக் கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்ததில், தவறு நடந்து இருப்பதாக இன்சமாம் உல் ஹக் மற்றும் பாபர் அசாமிற்கு எதிராக ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால், அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐந்து பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து, அணித் தேர்வு செயல்முறை தொடர்பான ஊடகங்களில் வெளியான நலன் முரண்பாடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உள்ளது. இந்த குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் விரைவான முறையில் சமர்ப்பிக்கும்” என அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.