Gambhir Gill: கழுத்தில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.
வேலைப்பளுவில் கில்?
இங்கிலாந்து டெஸ்ட் தொடரை முடித்ததும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை உள்ளூரில் வழிநடத்திய சுப்மன் கில், ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரிலும் கேப்டனாக செயல்பட்டார். அதனை தொடர்ந்து டி20 தொடரில் வீரராக பங்கேற்றார். அங்கிருந்து தாயகம் திரும்பியதும் உள்ளூரில், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். அப்போது தான் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, ஓய்வின்றி தொடர்ந்து விளையாடுவதால், கில்லுக்கு வேலை பளு அதிகரித்துள்ளதாக விவாதங்கள் எழுந்தன. செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியிலிருந்து தொடர்ந்து விளையாடி வரும் கில்லுக்கு, அவ்வப்போது ஓய்வளிக்க வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
”கில்லுக்கு ரெஸ்ட் கொடுங்க”
ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் கலவையான முறையில் மாற்றப்பட்டு வருகின்றனர். ஆனால், 25 வயதே ஆன கில் மூன்று ஃபார்மெட்களிலும் விளையாடி வருகிறார். டி20 போட்டியில் துணை கேப்டனாகவும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் கேப்டனாகவும், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 தொடர்களில் பங்கேற்றுள்ளார். இத்தகைய பணிச்சுமை காரணமாகவே கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டு உள்ளதகாவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதனால், தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய இரண்டாவது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழலில், அந்த போட்டியில் கில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. எனவே, வீரர்களின் உடல் மற்றும் மனநலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு சீரான இடைவெளியில் ஓய்வளிக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வலியுறுத்துகின்றனர்.
கில்லுக்கு கம்பீரின் அட்வைஸ்:
பணிச்சுமையை நிர்வகிப்பது குறித்து வெளியில் இருந்து வரும் ஆலோசனைகளை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நிராகரித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா எடுத்த பேட்டியின் போது, கில்லுக்கு ஓய்வளிக்கப்படுமா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கையில், “கில்லுக்கு ஓய்வு தேவைப்பட்டால் அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகலாம். ஐபிஎல் அணியை வழிநடத்துவது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் நீங்கள் இந்திய அணியை வழிநடத்த விரும்பவில்லை என்றால், வழிநடத்த வேண்டாம். மேலும் இந்தியாவுக்காக விளையாடும்போது, நீங்கள் உடற்தகுதியுடன் இருந்தால், நீங்கள் மனரீதியாக சோர்வடைய மாட்டீர்கள்” என கம்பீர் பதிலளித்துள்ளார்.
ஐபில் போட்டியில் கில்:
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியின் கேப்டனாக சுப்மன் கில் செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆண்டு ஊதியமாக 16.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தென்னாப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், கில் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் தற்போது வரை இல்லை. இருப்பினும் அவர் குணமடைந்து போட்டிக்குத் தயாராக குறைந்தது 10 நாட்கள் ஓய்வு தேவை என்று கூறப்படுகிறது. எனவே, நவம்பர் 30 ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கும், அதைத் தொடர்ந்து நடைபெறும் டி20 தொடருக்கும் கில் உடற்தகுதி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.