ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியினர் ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி சுப்மன்கில் சதத்தின் உதவியுடன் 289 ரன்களை குவித்தது.




இதையடுத்து, 290 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 84 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில், சிக்கந்தர் ராசா மட்டும் தனி ஆளாக போராடினார். அபாரமாக ஆடிய சிக்கந்தர் ராசா இந்திய அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் விளாசி 88 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய அணிக்கு அச்சுறுத்தலாகவே இருந்த சிக்கந்தர் ராசா ஜிம்பாப்வே அணி வெற்றியின் அருகில் நெருங்கிய நேரத்தில் அதாவது 275 ரன்களை எட்டியபோது ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய அவர் 95 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 115 ரன்கள் விளாசி அசத்தினார்.






இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த சிக்கந்தர் ராசா கடந்த 6 ஒருநாள் போட்டியில் அடிக்கும் மூன்றாவது சதம் இதுவாகும். வங்கதேச அணிக்கு எதிராக ஜிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை வெல்வதற்கு சிக்கந்தர் ராசா மிகுந்த உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜிம்பாப்வே அணிக்கு ஆபத்பாந்தவனாக விளங்கி வரும் சிக்கந்தர் ராசா இதுவரை 119 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6 சதங்கள், 20 அரைசதங்களுடன் 3 ஆயிரத்து 511 ரன்களை விளாசியுள்ளார்.




17 டெஸ்ட் போட்டிகளில் ஆடி  1 சதத்துடன் 1187 ரன்களை விளாசியுள்ளார். 58 டி20 போட்டிகளில் ஆடி 5 அரைசதங்களுடன் 1040 ரன்களை விளாசியுள்ளார். பகுதிநேர பந்துவீச்சாளரான சிக்கந்தர் ராசா டெஸ்ட் போட்டிகளில் 34 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.






2013ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமான சிக்கந்தர் ராசா உலககோப்பை டி20 போட்டித் தொடரில் பங்கேற்பதற்கான அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர். இதன்மூலமாக, ஜிம்பாப்வே அணி அந்த தகுதிப்போட்டித் தொடரில் வெற்றி பெற்று உலககோப்பைக்கு தகுதி பெற்றது. வங்கதேச அணிக்கு எதிராக கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரிலும் சிக்கந்தர் ராசா அதிரடியாக இரு சதங்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்கு பீதியை கிளப்பிய சிக்கந்தர் ராசா ஆட்டமிழந்ததால் ஜிம்பாப்வே அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்திய அணி 3-0 என்று ஒயிட்வாஷ் செய்து அபார வெற்றி பெற்று அசத்தியது.