இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாவே சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளையும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன்காரணமாக ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைபற்றியுள்ளது. இந்தச் சூழலில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி சுப்மன் கில் சதத்தால் 289 ரன்கள் குவித்தது. 


 


இந்நிலையில் 290 ரன்கள் என்ற இலக்குடன் ஜிம்பாவே அணி தற்போது விளையாடி வருகிறது. ஜிம்பாவே ஆட்டத்தின் முதல் ஓவரில் தீபக் சாஹர் பந்துவீச வரும் போது அந்த முனையில் இருந்த ஜிம்பாவே வீரர் கயா எல்லை கோட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது தீபக் சாஹர் ஸ்டெம்பை தட்டினார். எனினும் அவர் ரன் அவுட் முறைக்கு நடுவரிடம் முறையிடவில்லை.


 






அவரின் இந்தச் செயல் தொடர்பாக ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ,


முன்னதாக கேப்டன் கே.எல்.ராகுல் 46 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்த போது பிராட் எவன்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த சுப்மன் கில் தவான் உடன் இணைந்து ரன்களை சேர்க்க தொடங்கினார். ஷிகர் தவான் 68 பந்துகளில் 40 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார். இதனால் இந்திய 21 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. 


அப்போது ஜோடி சேர்ந்த சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் 3வது விக்கெட்டிற்கு 140 ரன்கள் சேர்த்து அசத்தினர். இதில் சுப்மன் கில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அரைசதம் கடந்து 61 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து இஷான் கிஷான் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த தீபக் ஹூடா ஒரு ரன்னிலும், சஞ்சு சாம்சன் 15 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த அக்சர் பட்டேல் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.


 




இறுதி கட்டத்தில் இந்திய அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து கொண்டு வந்தது.  சதம் கடந்திருந்த சுப்மன் கில் 97 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் விளாசி 130 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்திருந்தது.  ஜிம்பாவே அணிக்கு 290 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.