இந்தியாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழ்வது சென்னை. சென்னை தினம் என்று அழைக்கப்படும் சென்னையின் 383வது நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னை தினத்தை  சிறப்பிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் கடந்த இரண்டு நாளாக கோலாகலமாக விழா எடுத்து கொண்டாடப்பட்டது. 


இந்நிலையில் சென்னை தினத்தை முன்னிட்டு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், “நம்முடைய சென்னையின் பெருமையை மஞ்சள் நிற உடையில் அலங்கரித்த ஸ்டார்கள்...” எனப் பதிவிட்டு ஒரு வீடியோவை இணைத்துள்ளது. அந்த வீடியோவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய மேத்யூ ஹெய்டன், ஹசி, தோனி, பிராவோ, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 


 






இந்த வீடியோவை சென்னை ரசிகர்கள் பலரும் வேகமாக வைரலாக்கி வருகின்றனர். 


சென்னை தினம் உருவானது எப்படி..? 


சமீப காலமாக சென்னையின் பெருமையைக் கொண்டாட 'மெட்ராஸ் டே’ கொண்டாடப்படுகிறது. நவீன வரலாற்றை பொறுத்தவரையில், 1639இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து  செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர். அன்றைய விஜயநகர நாயக்கர்களிடம் இருந்து கிழக்கிந்திய கம்பெனி முறைப்படி 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம்தேதி வாங்கியது என்ற கருத்து ஏற்றுக்கொள்ளப்படுவதால், அந்த தினத்தை சென்னை தினமாக அனுசரிக்கலாம் என்று முடிவு செய்ததாக தெரிவிக்கின்றனர்.


முதலமைச்சரின் வாழ்த்து:


 சென்னை தினத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், “#HBDChennai! பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அதற்கு இன்னைக்கு 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல் இப்ப நீங்க பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கு என்பதில் பெருமை. நீங்க எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போறோம். காத்திருங்கள்" எனத் தெரிவித்துள்ளார். 


 






நாம் இன்று போற்றும் சிங்காரச் சென்னை ஒரு காலத்தில் சிறிய கிராமம்.  பசுமையான ஓர் அழகிய கிராமம். கூவம் அழகிய நதி. கிழக்கிந்திய கம்பெனி சென்னையை வாங்கியபிறகுதான், கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற ஆரம்பித்தது. ஏராளமான நிறுவனங்கள், ஷாப்பிங் இடங்கள் என மாற்றங்களைக் கொண்டு வந்தனர். 1688-ம் ஆண்டு, அன்றிருந்த மதராஸ் நகரை முதல் மாநகராட்சியாக இரண்டாம் ஜேம்ஸ் மன்னர் அறிவித்தார். சென்னைதான் நாட்டின் முதல் மாநகராட்சி என்பது குறிப்பிடத்தக்கது.