இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருப்பவர் சுப்மன் கில். 24 வயதே ஆன  இவர் இந்திய அணியின் தொடக்க வீரராக களமிறங்குகின்றார். ஐபிஎல் லீக்கில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களமிறங்கி கடந்த ஆண்டு ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற பெருமையைப் பெற்றார். ஒட்டுமொத்த உலகமும் புத்தாண்டினைக் கொண்டாடி வரும் நிலையில், சுப்மன் கில் 2023ஆம் ஆண்டில் தனது இயர் ப்ளேனில் இருந்து தவறவிட்ட உலகக் கோப்பையை நினைத்து மிகவும்  வருத்தத்துடன் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


அதில் சுப்மன் கில் 2023ஆம் ஆண்டிற்கான தனது இயர் ப்ளானில் இந்திய அணிக்காக அதிக சதம் விளாசியவர் என்ற நிலையில் இருக்கவேண்டும், குடும்பத்தை பெருமைப்படுத்தவேண்டும், அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும், என நினைத்துள்ளார். இதனை 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி ஒரு காகிதத்தில் எழுதி வைத்திருந்துள்ளார். இதனை தற்போது தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு 2023ஆம் ஆண்டினைக் குறித்தும் எழுதியுள்ளார்.  அதில் ”சரியாக ஒரு வருடம் முன்பு, நான் இதை எழுதினேன். 2023 முடிவடைவதால், இந்த ஆண்டு அனுபவங்கள், சில சிறந்த வேடிக்கை மற்றும் பிற சிறந்த அனுபவங்களால் நிறைந்துள்ளது. கடந்த ஆண்டு திட்டமிட்டபடி நடக்கவில்லை, ஆனால் எங்களிடம் இருந்த அனைத்தையும் கொடுத்து, எங்கள் இலக்குகளை நெருங்கிவிட்டோம் என்று பெருமையுடன் சொல்ல முடியும். வரவிருக்கும் ஆண்டு அதன் சொந்த சவால்களும் வாய்ப்புகளும் நிறைந்ததாக இருக்கும் என நினைக்கின்றேன். 2024-இல் எங்கள் இலக்குகளை நெருங்கிவிடுவோம் என்று நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 






கில் இந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் மொத்தமாக 1584 ரன்கள் எடுத்துள்ளார். இதன்போது இவரது சராசரி 63.36 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 105.45 ஆகவும் இருந்தது. 2023 ஆம் ஆண்டில், கில் மொத்தம் 5 ஒருநாள் சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு கில் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு அவரது சிறந்த ஸ்கோர் 208 ஆகும். இந்த ஆண்டு விளையாடிய ஒருநாள் போட்டிகளில், கில் மொத்தம் 41 சிக்ஸர்கள் மற்றும் 180 பவுண்டரிகள் அடித்துள்ளார். மேலும் அவர் ஒரு முறை மட்டுமே 0 ரன்னில் அவுட் ஆனார்.



  • ஒருநாள் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆனார் சுப்மன் கில்

  • இந்தாண்டு ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

  • ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்

  • உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 66 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார்.

  • ஒருநாள் போட்டியில் 29 இன்னிங்ஸ்களில் மொத்தம் 5 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.

  • சுப்மன் கில் இந்தாண்டு 2023ல் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் சீசனிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்த சீசனில் மொத்தம் 890 ரன்கள் எடுத்ததன் மூலம், விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். கில் இந்த ஆண்டு 17 ஐபிஎல் போட்டிகளில் 17 இன்னிங்ஸ்களில் 59.33 சராசரியிலும் 157.80 ஸ்ட்ரைக் ரேட்டிலும் மொத்தம் 890 ரன்கள் எடுத்தார். இதில் 3 சதங்கள் மற்றும் 4 அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல் 2023 இல், கில் மொத்தம் 33 சிக்ஸர்கள் மற்றும் 85 பவுண்டரிகளை அடித்தார். அதே நேரத்தில் அவரது சிறந்த ஸ்கோர் 129 ஆகும்