ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான டேவிட் வார்னர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு எடுப்பதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியிருந்த வார்னர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வினை அறிவித்துள்ளார். வரும் ஜனவரி 3ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடக்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட்தான் அவர் கடைசியாக விளையாடவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் ஆகும். ஆஸ்திரேலியா அணி தன்னை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வார்னரின் பங்கு என்பது ஆஸ்திரேலியா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. புத்தாண்டு தினத்தில் தனது ஓய்வு குறித்து வார்னர் தெரிவித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் வார்னர் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் விளைடுவார் என்பதால் அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. ஆஸ்திரேலியா அணிக்காக ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் வார்னர் 6 ஆயிரத்து 932 ரன்கள் குவித்து ஏழாவது இடத்தில் உள்ளார்.
இன்று அதாவது 2024ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் டேவிட் வார்னர் கூறுகையில், ”நான் எனது குடும்பத்துடன் நேரம் செலவு செய்ய ஆசைப்படுகின்றேன். இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின் போதே ஒருநாள் தொடரில் இருந்து ஓய்வு பெறுவது குறித்த எண்ணம் மனதில் இருந்தது. இதனால் நான் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு செய்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.
6 முறை ஆஸ்திரேலியா அணி உலகக் கோப்பையை தன்வசப்படுத்தியுள்ளது. இதில் வார்னர் இரண்டு முறை அதாவது 1015ஆம் ஆண்டு மற்றும் 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ளார். அதேபோல் 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணியில் வார்னர் இடம் பெற்றிருந்தாலும், அந்த ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது. டேவிட் வார்னர் உலகக் கோப்பையில் 1527 ரன்கள் எடுத்துள்ளார். உலகக் கோப்பையில் மட்டும் இவரது சராசரி 56.55ஆக உள்ளது. உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் வாரன்ர் 6வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 1,743 ரன்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.
டேவிட் வார்னர் இதுவரை 111 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதில் 8 ஆயிரத்து 695 ரன்கள் குவித்துள்ளார். இதில் 26 சதங்களும் 36 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 335 ரன்களுக்கு நாட் அவுட் என்பதுதான். ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரையில் 22 சதங்களும் 33 அரைசதங்களும் விளாசியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 179 ரன்களாகும். டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டில் டி20 தவிர மற்ற இரண்டு வகை கிரிக்கெட்டில் அதாவது ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வினை அறிவித்துள்ளதால், வரும் டி20 உலகக் கோப்பையுடன் டி20 போட்டியில் இருந்தும் ஓய்வினை அறிவித்துவிடுவார் என கூறப்படுகின்றது.