இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் குவித்தது. 


இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சுப்மன் கில் 149 பந்துகளில் 208 ரன்கள் குவித்திருந்தார். சுப்மன் கில் தவிர்த்து அணியில் களம் கண்ட 9 வீரர்களும் சேர்த்தே 128 ரன்கள் மட்டுமே அடித்தனர். எக்ஸ்ட்ரா வகையில் 13 ரன்கள் இந்திய அணிக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்தநிலையில், சுப்மன் கில் இந்த போட்டியில் 200 ரன்களை குவித்ததன்மூலம் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளார். அவற்றை கீழே காணலாம். 


மிக இளம் வயதில் 200 அடித்த முதல் வீரர்: 


நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன்மூலம் மிக இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் படைத்துள்ளார். இவர் 23 ஆண்டுகள் 132 நாட்களில் இந்த சாதனையை தனதாக்கியுள்ளார். முன்னதாக, இந்த சாதனை இஷான் கிஷன் தனது 24 வயது மற்றும் 145 நாட்களில் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்திருந்தார். இந்த பட்டியலில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா மூன்றாவது இடத்தில் உள்ளார். 26 வயது 186 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்தார்.   


ஹைதராபாத்தில் மைதானத்தில் தனிப்பட்ட நபரின் அதிகப்பட்ச ரன்:


ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டிகளில் ஒரு தனிப்பட்ட நபரின் அதிகப்பட்ச ரன்னை 200 அடித்து சுப்மன் கில் படைத்துள்ளார். இதற்கு முன்பு, கடந்த 2009ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு சச்சின் டெண்டுல்கர் 175 ரன்கள் அடித்ததே இந்த மைதானத்தில் தனிப்பட்ட நபரின் அதிகப்பட்ச ரன்னாக இருந்தது. தற்போது 208 ரன்கள் குவித்து சுப்மன் கில் முதலிடத்தில் உள்ளார். 


ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்: 


ஒருநாள் போட்டிகளில் அதிகவேகமாக 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும், சர்வதேச அளவில் இரண்டாவது வீரர் என்ற பெருமையும் சுப்மன் கில் படைத்தார். கில் அதிவேகமாக 1000 ரன்களை 19 இன்னிங்கிஸில் அடித்தார். இதற்கு முன் விராட் கோலியும், ஷிகர் தவானும் 24 இன்னிங்சில் 1000 ரன்களை எட்டினர்.


சச்சினின் சாதனை முறியடிப்பு:


நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார். 


முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் அதிக ரன் குவித்த சாதனை படைத்தார். 2003ல் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 186 ரன்கள் எடுத்தார். தற்போது கில் அவரது சாதனையை முறியடித்துள்ளார்.


ரோகித் சர்மாவின் சாதனையும் முறியடிப்பு:


சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற உலக சாதனையை ரோஹித் சர்மா படைத்திருந்தார். இவர் தனது 26 வயது 186 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் 200 ரன்களை விளாசினார்.


 சொந்த மண்ணில் சுப்மன் கில் தனது 23 வயது 132 நாட்களில் இரட்டை சதம் அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார்.