இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை வென்றது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


இரு அணிகளும் தீவிரம்:


தொடரை ஏற்கனவே 2-0 என கைப்பற்றிய நிலையில், கடைசி போட்டியிலும் வென்று தொடரை முழுமையாக கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரம், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏற்கனவே டி-20 மற்றும் ஒருநாள் தொடரை இழந்த இலங்கை அணி, கடைசி போட்டியிலாவது வென்று ஆறுதலடைய முனைப்பு காட்டி வருகிறது.


இந்திய அணி பேட்டிங்:


டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ரோகித் சர்மா - சுப்மன் கில் ஜோடி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 95 ரன்களை சேர்த்தது. 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட 42 ரன்கள் சேர்த்து இருந்தபோது, கருணரத்னே பந்துவீச்சில் அவுட்டானார்.






 


சுப்மன் கில் சதம்:


மறுமுனையில் நிதானமாக ஆடிய சுப்மன் கில், இலங்கை அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். கோலி உறுதுணையக இருந்து ரன்களை சேர்க்க, கில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து, 89 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உடன் சதத்தை பூர்த்தி செய்தார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். தொடர்ந்து 97 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் உட்பட, 116 ரன்களை சேர்த்து இருந்தபோது ரஜிதா பந்துவீச்சில் சுப்மன் கில் ஆட்டமிழந்தார்.


 


நேருக்கு - நேர்


இதுவரை இரு அணிகளும் 164 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், அதில் இந்திய அணி 95 போட்டிகளிலும், இலங்கை அணி 57 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. அதோடு, கடந்த போட்டியில் தோற்றதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக தோல்வியை கண்ட அணியின் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.