2023ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருடன் இந்திய கிரிக்கெட் அணி இந்தாண்டு தனது பயணத்தை முடிகிறது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான இந்த தொடருக்கான மூன்று கேப்டன்களின் தலைமையிலான இந்திய அணிகளை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இதில், இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் டி20 மற்றும் டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுள்ளார், அதே நேரத்தில் அவருக்கு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 


இதன்மூலம், சுப்மன் கில்லுக்கான இந்த ஆண்டு ஒருநாள் போட்டி முடிந்துவிட்டது. இந்தநிலையில், 2023ல் கில் செய்த சாதனையை பார்த்தால் திகைத்து போவீர்கள். முதலில் சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் செய்த சாதனை பற்றியும் பின்னர் 2023 இல் அவர் செய்த ஒட்டுமொத்த சாதனைகள் பற்றியும் இங்கே பார்க்கலாம்.


இந்தாண்டு ஒருநாள் போட்டிகளில் கில் செய்த சாதனைகள்:


கில் இந்த ஆண்டு ஒருநாள் போட்டியில் மொத்தமாக 1584 ரன்கள் எடுத்துள்ளார். இதன்போது இவரது சராசரி 63.36 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 105.45 ஆகவும் இருந்தது. 2023 ஆம் ஆண்டில், கில் மொத்தம் 5 ஒருநாள் சதங்கள் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு கில் நியூசிலாந்துக்கு எதிராக இரட்டை சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு அவரது சிறந்த ஸ்கோர் 208 ஆகும். இந்த ஆண்டு விளையாடிய ஒருநாள் போட்டிகளில், கில் மொத்தம் 41 சிக்ஸர்கள் மற்றும் 180 பவுண்டரிகள் அடித்துள்ளார். மேலும் அவர் ஒரு முறை மட்டுமே 0 ரன்னில் அவுட் ஆனார்.



  • ஒருநாள் போட்டியில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் ஆனார் சுப்மன் கில்

  • இந்தாண்டு ஒருநாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.

  • ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்தார்

  • உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 66 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

  • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் மட்டும் இரட்டை சதம் அடித்தார்.

  • ஒருநாள் போட்டியில் 29 இன்னிங்ஸ்களில் மொத்தம் 5 சதங்கள் மற்றும் 9 அரைசதங்கள் அடித்துள்ளார்.


ஒருநாள் மற்றும் டெஸ்ட் மற்றும் டி20 என மொத்தமாக 2023ல் சுப்மன் கில் மொத்தம் 2,118 சர்வதேச ரன்களை எடுத்துள்ளார். இதன்போது, அவரது சராசரி 50.42 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 102.26 ஆகவும் இருந்தது. கில் மொத்தம் 7 சதங்கள் மற்றும் 10 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் இந்தாண்டு கில் மொத்தமாக 58 சிக்ஸர்கள் மற்றும் 227 பவுண்டரிகள் அடித்துள்ளார்.


2023 இல் கில்லின் ஒட்டுமொத்த சாதனை:


சுப்மன் கில் இந்தாண்டு 2023ல் சர்வதேச போட்டிகள் மட்டுமின்றி ஐபிஎல் சீசனிலும் சிறப்பாக செயல்பட்டார். இந்த சீசனில் மொத்தம் 890 ரன்கள் எடுத்ததன் மூலம், விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். கில் 17 ஐபிஎல் போட்டிகளில் 17 இன்னிங்ஸ்களில் 59.33 சராசரியிலும் 157.80 ஸ்ட்ரைக் ரேட்டிலும் மொத்தம் 890 ரன்கள் எடுத்தார். இதன்போது 3 சதங்கள் மற்றும் 4 அரை சதங்களையும் அடித்துள்ளார். ஐபிஎல் 2023 இல், கில் மொத்தம் 33 சிக்ஸர்கள் மற்றும் 85 பவுண்டரிகளை அடித்தார். அதே நேரத்தில் அவரது சிறந்த ஸ்கோர் 129 ஆகும்.



இந்த ஆண்டு சுப்மன் கில் அடித்த அனைத்து சர்வதேச மற்றும் ஐபிஎல் ரன்களையும் சேர்த்தால், அவர் இதுவரை மொத்தம் 3,008 ரன்கள், 10 சதங்கள், 14 அரை சதங்கள், 91 சிக்ஸர்கள் மற்றும் 312 பவுண்டரிகள் அடித்துள்ளார். இந்த எண்ணிக்கை இன்னும் நிறுத்தப்படவில்லை. ஏனென்றால் 2023 ஆம் ஆண்டிலேயே கில் இன்னும் 3 டி20 மற்றும் ஒரு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறார்.