உலகக் கோப்பை கிரிக்கெட்டை வெற்றி கரமாக முடித்த பின்னர் ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. இதில் இதுவரை மொத்தம் 3 போட்டிகள் முடிந்துள்ளது. இந்திய அணி இதுவரை நடைபெற்ற மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருக்கின்றது. இந்திய அணி தொடரை வெல்ல இன்னும் ஒரு போட்டியில் வென்றால் போதும். ஆனால் ஆஸ்திரேலியா அணிக்கு தொடரை வெல்ல, மீதம் உள்ள இரண்டு போட்டிகளிலும் வெல்ல வேண்டும். இப்படியான நிலையில்  இரு அணிகளும் இன்று களமிறங்குகின்றது. 


இந்த நிலையில் இன்று அதாவது டிசம்பர் ஒன்றாம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி  ராய்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இந்த போட்டி குறித்த நேரப்படி மாலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


இரு அணிகளும் இதுவரை 29 டி20 போட்டிகளில் நேரடியாக மோதியுள்ளது. இதில் இந்திய அணி 17 போட்டிகளிலும் ஆஸ்திரேலியா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் தொடரைப் பொறுத்தவரையில் மூன்று போட்டிகளுமே 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டுள்ளது. இரு அணிகள் தரப்பிலும் தலா ஒரு சதம் விளாசப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் சேர்த்துள்ளது. இந்திய அணியின் பேட்டிங் என்பது சிறப்பாக இருந்தாலும் பந்து வீச்சு மட்டும் கொஞ்சம் கவலை அளிக்கின்றது. 


உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்த இந்திய அணியின் ஆட்டத்தினைப் பார்க்க வரமாட்டார்கள் என கருதப்பட்டது. ஆனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானம் முழுவதும் குவிந்து இந்திய அணிக்கு ஆதரவளித்து வருகின்றனர். 


ஆஸ்திரேலியா (பிளேயிங் லெவன்): ஜோஷ் பிலிப், டிராவிஸ் ஹெட், பென் மெக்டெர்மாட், ஆரோன் ஹார்டி, டிம் டேவிட், மேத்யூ ஷார்ட், மேத்யூ வேட்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன் ), பென் ட்வார்ஷூயிஸ், கிறிஸ் கிரீன், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா


இந்தியா (பிளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர், அவேஷ் கான், முகேஷ் குமார்