Shreyas Iyer: நடப்பு உலகக் கோப்பையில் இரண்டாவது சதம் மற்றும் அரையிறுதி போட்டியில் அதிக வேக சதத்தை பதிவு செய்துள்ளார் இந்திய அணியின் ஸ்ரேயஸ் ஐயர்.
நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் வழக்கம்போல் ரோகித் சர்மாவும் சும்பன் கில்லும் களமிறங்கினர்.
அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் நியூசிலாந்தின் பந்துவீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்தார். அதிரடியாக விளையாடி சிக்ஸர் மழை பொழிந்தார். இதில் ரசிகர்கள் ஆரவாரமாக மைதானத்தில் குதூகலமாகி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். 4 பவுண்டரி, 4 சிக்ஸர் என விளாசி 29 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார்.
இதையடுத்து கோலி களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது சுப்மன் கில் சரவெடியாய் வெடிக்க தொடங்கினார். அவர் 65 பந்துகளில் 3 சிக்ஸர், 8 பவுண்டரி விளாசி 79 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் ரிட்டையர் ஹட் மூலம் வெளியேறினார்.
பின்னர், நிதானமாக விளையாடிய விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஒரு மாபெரும் சாதனையை படைத்தார். அந்த வகையில் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
அப்போது மைதானமே கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. அதன்படி, 113 பந்துகள் களத்தில் நின்ற விராட் கோலி 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 117 ரன்களை குவித்தார்.
ஸ்ரேயாஸ் அதிரடி:
ஒரு புறம் விராட் கோலி நிதானமாக விளையாடி கொண்டிருக்க ஸ்ரேயஸ் ஐயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்படி சிக்ஸர் மழையை பொழிந்த ஸ்ரேயஸ் மொத்தம் 8 சிக்ஸர்கள் அடித்தார். மேலும், 4 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 70 பந்துகள் களத்தில் நின்ற அவர் 105 ரன்களை குவித்தார். முன்னதாக 67 வது பந்தில் ஸ்ரேயஸ் சதம் அடித்து அசத்தினார்.
அரையிறுதியில் அதிவேக சதம்:
உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிச் சுற்றில் அடிக்கப்பட்ட அதிவேக சதம் இது தான். மேலும் ஸ்ரேயஸ் இந்த தொடரின் இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெடுகள் இழப்பிற்கு 397 ரன்களை குவித்துள்ளது. மேலும், 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
மேலும் படிக்க: Virat Kohli: அதிக ரன்கள், அதிக அரைசதம்... சாதனை மேல் சாதனை செய்யும் விராட் கோலி! விவரம் இதோ!
மேலும் படிக்க: Shubman Gill: திணறும் நியூசிலாந்து: அதிரடியாக அரைசதம் விளாசி தசைப்பிடிப்பால் வெளியேறிய சுப்மன் கில்!