இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றிருந்த நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளன. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் பும்ரா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளும் என மொத்தம் 9 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தபோது இந்திய அணியின் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் தனது விக்கெட்டினை டாம் ஹார்ட்லி பந்தில் ஆட்டமிழந்தார். டாம் ஹார்ட்லி வீசிய பந்தை சிக்ஸர் விளாச தூக்கி அடித்தபோது பென் ஸ்டோக்ஸ் லாவகமாக கேட்ச் பிடித்து, விக்கெட் என்பதை குறிப்பதைப் போல் ஒற்றை விரலை தூக்கிக் காட்டினார். பென் ஸ்டோக்ஸின் இந்த செயல் இணையத்தில் வைரலானது.
இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டு இருந்தது. களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் பென் ஃபோக்ஸ் ஆகியோர் இருந்தனர். பென் ஃபோக்ஸ் பந்தை அடித்துவிட்டு ஓட, நான் - ஸ்ட்ரைக்கர் திசையில் இருந்த பென் ஸ்டோக்ஸ் கீரிஸ்க்குள் வருவதற்கு முன்னரே ஷ்ரேயாஸ் ஐயர் பந்தை ஸ்ட்ம்பை நோக்கி வேகமாக வீச, பந்து சரியாக ஸ்டெம்பில் பட்டது. பந்து ஸ்டெம்பில் பட்டதுமே ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட் என்பதை குறிப்பதைப் போல் ஒற்றை விரலைக் காட்டினார். இன்னும் சொல்லப்போனால், பென் ஸ்டோக்ஸ் எப்படி ஒற்றை விரலைக் காட்டினாரோ அப்படியே காட்டினார். இணையத்தில் இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 15ஆம் தேதி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்ட்ரா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியையும் இந்திய அணி வென்று தொடரில் முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.