IND vs ENG: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றது. இதில் 2 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. முதல் போட்டியில் ஏற்பட்ட காயத்தினால் இந்திய அணியின் சீனியர் வீரர்களாக விளங்கும் கே.எல். ராகுல், ஜடேஜா ஆகியோர் இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விளையாடவில்லை.
இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைச் சந்திக்க முக்கிய காரணங்களில் ஒன்றாக, விராட் கோலி இல்லாததே என கூறப்பட்டது. இப்படியான நிலையில் இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் விராட், ராகுல், ஜடேஜா என அணியின் முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கியது.
இரண்டாவது போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசி அமர்க்களப் படுத்தினார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்டுகளை இழந்தாலும் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாகவும் பொறுப்பாகவும் அதிரடியாகவும் விளையாடி வந்த ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு மட்டும் இல்லாமல் ரசிகர்களுக்கும் பெரும் நம்பிக்கை அளித்தார். இன்னும் சொல்லப்போனால் பல இந்திய ரசிகர்கள் ஜெய்ஸ்வாலை இடது கை ஷேவாக் என புகழாரம் சூட்ட ஆரம்பித்து விட்டனர். அதிரடியாக விளையாடிய ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 209 ரன்கள் குவித்து தனது முதல் இரட்டைச் சதத்தை விளாசி அமர்க்களப்படுத்தியுள்ளார்.
அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் மற்றொரு இளம் நட்சத்திர வீரரான சுப்மன் கில் 147 பந்துகளில் 104 ரன்கள் சேர்த்து அமர்க்களப் படுத்தினார். கடந்த சில மாதங்களாக சர்வதேச போட்டியில் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தாத சுப்மன் கில், பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தார். இப்படியான நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில், மிகவும் கடுமையான ஆடுகளத்தில் சதம் விளாசி இந்திய அணியின் ஸ்கோர் உயர முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றே கூறவேண்டும். இந்திய அணியின் சீனியர் வீரர்கள் இல்லாத சூழலில் பலமான இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினர். ஜாம்பவான்கள் இல்லாத சூழலில் இளம் வீரர்கள் இந்திய அணியை தூக்கி நிறுத்தியது மட்டும் இல்லாமல், 5 போட்டிகள் கொண்ட தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்யவும் காரணமாகவும் இருந்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உருவெடுத்துள்ளது இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை உண்டாக்கியுள்ளது.