இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பணியை கௌதம் கம்பீர் ஏற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில் டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு , ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது வருகின்ற ஜூலை 5 முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த இரு தொடரிலும் ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட அனுபவ வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சில புதிய மற்றும் இளம் வீரர்கள் இந்த தொடரில் விளையாட வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, இரு அணிகளுக்கும் எதிராக இந்தியாவின் பி அணி அதாவது புதிய அணி புதிய பயிற்சியாளரின் கீழ் அனுப்பப்படலாம்.


ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்:


கௌதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளரான பிறகு ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பலாம் என்று நம்பப்படுகிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கொடுக்கலாம். மேலும், அவர் இந்திய அணியின் கேப்டனாகவும் இருப்பார் என தெரிகிறது. அந்த அறிக்கையின்படி, ஜிம்பாப்வேக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறிவிக்கப்படலாம்.






ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இடம் அளிக்கலாம் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரியான் பராக், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆகியோர் வாய்ப்பு பெறலாம். இதனுடன், ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, யாஷ் தயாள், விஜய்குமார் வைஷாக் ஆகியோர் தேர்வாளர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 


ஷ்ரேயாஸ் ஐயரின் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி: 


இந்த ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக ஷ்ரேயாஸ் ஐயர் தனது கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார். இது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஆகும். அதேசமயம், கடந்த ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடைசி டி20 போட்டியும், 2023 டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டியும் விளையாடினார்.


ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை இந்திய அணிக்காக 59 ஒருநாள் போட்டிகளில் 49.64 சராசரியுடன் 2383 ரன்களும், 51 டி20 சர்வதேசப் போட்டிகளில் 30.66 சராசரியில் 1104 ரன்களும் எடுத்துள்ளார். மேலும், 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 811 ரன்கள் எடுத்துள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் இந்த சீசனில் ஐபிஎல்லில் 14 போட்டிகளில் 39 சராசரியிலும் 146.86 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 351 ரன்கள் எடுத்தார்.