இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாளான இன்று இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. அத்துடன் நியூசிலாந்து அணியைவிட 216 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது. 


தேநீர் இடைவேளைக்கு முன்பாக கடைசி ஓவரில் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்களுடன் டிம் சௌதி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் மற்றும் அரைசதம் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் இன்னிங்ஸில் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் அடித்திருந்தார். அதன்பின்னர் இன்றைய இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்ரேயாஸ் ஐயர் 65 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 






மேலும் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இவர் 3ஆம் இடத்தையும் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் 170 ரன்களுடன் அவர் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். அவருக்கு முன்பாக ரோகித் சர்மா 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய அறிமுக போட்டியில் 177 ரன்கள் அடித்து இப்பட்டியலில் 2ஆம் இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஷிகார் தவான் உள்ளார். அவர் 2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மொகாலி டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி 187 ரன்கள் எடுத்தார். 


இந்தப் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது இடம்பிடித்து அசத்தியுள்ளார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள இவரை அடுத்த போட்டியில் இந்திய அணி நிச்சயமாக எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலம் வர தொடங்கியுள்ளது. இந்திய அணி சற்று முன்பு வரை 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. நியூசிலாந்து அணியைவிட இந்திய அணி 238 ரன்கள் அதிகம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: ‛அந்த பந்தை எப்படி போட்டீங்க...’ - அக்சரை நேர்காணல் செய்த அஷ்வின்!