நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் களமிறங்க உள்ளது. ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்க போகும் முதல் டெஸ்ட் தொடர் இது என்பதால் அதில் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் சமீப காலங்களாக இந்தியாவின் மிகவும் முக்கியமான 3 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் சதம் அடிக்காதது பெரிய சிக்கலாக உள்ளது. குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங்கிற்கு அது பெரிய தலைவலியாக அமைந்துள்ளது. அதாவது புஜாரா, விராட் கோலி மற்றும் ரஹானே ஆகிய மூவரின் சதம் இல்லாத இன்னிங்ஸ்கள் இந்தியாவிற்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.
இந்தச் சூழலில் அவர்கள் மூவரும் கடைசியாக சதம் அடித்து எத்தனை நாட்கள் ஆகிறது தெரியுமா?
புஜாரா-1055 நாட்கள்:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் நீண்ட காலமாக நம்பர் 3 இடத்தில் களமிறங்கி வருபவர் புஜாரா. இவர் இந்திய அணியின் அடுத்த டிராவிட் என்று எல்லாம் கூட பலரும் இவரை ஒப்பிட்டு வந்தனர். ஆனால் அவர் டிராவிட் அளவிற்கு இன்னும் உருவெடுக்கவில்லை என்றாலும் சில சமயங்களில் இந்தியாவை காப்பாற்றும் இன்னிங்ஸ்களை ஆடி வந்தார். ஆனால் சமீபத்தில் இவர் சதம் அடிக்காதது இந்திய பேட்டிங்கிற்கு பெரிய சிக்கலாக உள்ளது. கடைசியாக புஜாரா 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் அடித்திருந்தார். அதற்கு பிறகு புஜாரா 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் கூட அடிக்கவில்லை. இந்த நியூசிலாந்து தொடரில் ராகுல் டிராவிட் பயிற்சியில் அவர் சதம் அடிப்பார் என்று அனைவரும் கருதுகின்றனர்.
விராட் கோலி-732 நாட்கள்:
இந்திய கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார். அதற்கு பின்பு 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 563 ரன்கள் அடித்துள்ளார். அதில் வெறும் 5 முறை மட்டும் அரைசதம் கடந்துள்ளார். மேலும் 3 முறை டக் அவுட்டும், 4 முறை ஒற்றை இலக்க ஸ்கோருடனும் கோலி அவுட் ஆகியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி களமிறங்க உள்ளார். மும்பையில் நடைபெறும் அந்தப் போட்டியில் இவர் மீண்டும் சதம் கடக்க வேண்டும் என்று இவருடைய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
ரஹானே-331 நாட்கள்:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரஹானே. இவர் விராட் கோலி இல்லாததால் நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் கேப்டனாக செயல்பட உள்ளார். இவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மெல்பேர்னில் 112 ரன்கள் அடித்தார். அதற்கு பின்பு 19 டெஸ்ட் இன்னிங்ஸில் 2 அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். மேலும் அந்த சதத்திற்கு பிறகு இவருடைய பேட்டிங் சராசரியும் 19.57 ஆக குறைந்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இவர் சிறப்பாக சதம் அடிக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கமாக அது அமையும்.
மேலும் படிக்க: பூனையுடன் கோலி பகிர்ந்த க்யூட் புகைப்படங்கள், ”ஹலோ” சொன்ன அனுஷ்கா!