இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மும்பையில் 2.90 கோடி மதிப்புள்ள வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்.
புதிய வீடு வாங்கிய ஸ்ரேயாஸ் ஐயர்:
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் ஸ்ரேயாஸ் ஐயர். ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடத்தக்க பங்காற்றி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ஐ.பி.எல் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2024 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் கோப்பையை வென்றுள்ளது.
சமீபகாலமாக தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், இரானி கோப்பையில் மும்பை அணிக்காக விளையாட உள்ளார்.
இது இந்திய கிரிக்கெட் அணியில் தனது இடத்தை மீட்பதற்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒரு முக்கியமான வாய்ப்பாக கருதப்படுகிறது. அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை அணியில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிருத்வி ஷா ஆகியோர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தங்கள் திறமையை நிரூபிக்க முயற்சிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
வீட்டின் விலை 2.90 கோடி:
இந்த நிலையில், மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது தாயுடன் இணைந்து 2.90 கோடி ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கி இருக்கிறார். 525 சதுர அடி மட்டுமே கொண்ட அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் விலை 2.90 கோடி என்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தான் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அவரது தாயார் ரோகிணி ஆகியோரது பெயரில் மும்பை ஒர்லி பகுதியில் உள்ள ஆதர்ஷ் நகரில் உள்ள குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் இந்த வீடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.