ஐ.சி.சி. ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை மற்றும் சிறந்து விளையாடும் பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையை வெளியிடுகிறது. அந்த வகையில், ஐ.சி.சி. நேற்று புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.


கிரிக்கெட் தரவரிசை:


டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவில் இருந்து டாப் 5-க்குள் இளம் வீரர் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார். அவர் 751 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் ரிஷப்பண்ட் உள்ளார். ரோகித் சர்மா 5 இடங்கள் சரிந்து 10வது இடத்தில் உள்ளார். ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி 5 இடங்கள் சரிந்து 12வது இடத்தில் உள்ளார்.


ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அசாம் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் ரோகித்சர்மாவும், 3வது இடத்தில் சுப்மன்கில்லும், 4வது இடத்தில் விராட் கோலியும் உள்ளனர்.


டி20 கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் முதலிடத்தில் உள்ளார். அவர் 881 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 2வது இடத்தில் 805 புள்ளிகளுடன் உள்ளார். இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 4வது இடத்தில் உள்ளார். அவர் 757 புள்ளிகளுடன் உள்ளார். டி20 போட்டியில் இருந்து கோலி, ரோகித் ஓய்வு பெற்றுவிட்டதால் அவர்கள் இந்த தரவரிசையில் இடம்பெறவில்லை.


அசத்திய ஜெய்ஸ்வால்:


டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 5 இடத்தில் உள்ள ஒரே வீரர் ஜெய்ஸ்வால் மட்டுமே ஆவார். ஜெய்ஸ்வால் இதுவரை ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் ஆகாத காரணத்தால் அவர் ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் இடம்பெறவில்லை. இந்திய அணியின் எதிர்கால நட்சத்திரமாக கருதப்படும் ஜெய்ஸ்வால் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.


23 வயதான ஜெய்ஸ்வால் 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 சதங்கள், 2 இரட்டை சதங்கள், 5 அரைசதங்கள் உள்பட 1094 ரன்களை எடுத்துள்ளார். 23 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம் 5 அரைசதம் உள்பட 723 ரன்களை எடுத்துள்ளார். இதுதவிர ஐபிஎல் தொடரில் 52 போட்டிகளில் ஆடி 1607 ரன்களை எடுத்துள்ளார். மொத்தம் 2 சதங்கள், 9 அரைசதங்கள் விளாசியுள்ளார். ஜெய்ஸ்வால் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் சூழலில் அவர் விரைவில் ஒருநாள் போட்டிகளிலும் அறிமுகம் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.