சர்வதேச அளவில் மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தலைசிறந்த வீரராக வலம் வருபவர் விராட்கோலி. மூன்று வடிவ போட்டிகளிலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள விராட்கோலி, சுமார் 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்காமல் இருந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்து தனது மிகப்பெரிய கம்பேக்கை அளித்தார்.
கோலி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், விராட் கோலியின் கம்பேக் பிறகு பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இவரது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க, கோலி டி20 போட்டிகளில் இருந்து விலகிவிடலாம் என்று கணித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கோலி ஓய்வு பெறலாம். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க அவர் அதைச் செய்யலாம். நான் கோலியா இருந்திருந்தால் பெரிய வடிவிலான தொடர்களை கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பேன்” என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாகவே, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா வீரர் ஆரோன் ஃபின்ச் போன்ற வீரர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்திலிருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மூன்று வடிவங்களிலும் தலா 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய முதல் இந்தியர் மற்றும் உலகின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்ற கோலி. அந்த பட்டியலில் ஒட்டுமொத்தமாக நியூசிலாந்து அணி வீரர் ராஸ் டெய்லர் முதல் இடத்தில் உள்ளார்.
ரன்மெஷின் என்று செல்லமாக அழைக்கப்படும் விராட்கோலி இதுவரை இந்திய அணிக்காக 104 டி20 போட்டிகளில் ஆடி 1 சதம், 32 அரைசதங்கள் உள்பட 3 ஆயிரத்து 584 ரன்களை விளாசியுள்ளார். 262 ஒருநாள் போட்டிகளில் ஆடி 43 சதங்கள், 64 அரைசதங்கள் உள்பட 12 ஆயிரத்து 344 ரன்களை விளாசியுள்ளார். 102 டெஸ்ட் போட்டிகளில் 27 சதங்கள், 7 இரட்டை சதங்கள், 28 அரைசதங்கள் உள்பட 8 ஆயிரத்து 74 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.