இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பை தொடருக்கு பிறகு ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்கிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது. டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களில் விற்பனையாகி விட்டதாக ஐசிசி தெரிவித்துள்ளது. தற்போது டி20 உலகக் கோப்பை தொடருக்கு சுமார் 5 லட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு மட்டும் டிக்கெட் விற்பனை உடனடியாக முழுவதும் விற்பனையாகி விட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிரா ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி, தென்னாப்பிரிக்கா-பங்களாதேஷ் போட்டி ஆகியவற்றிற்கும் கனிசமான டிக்கெட்கள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சூப்பர் 12 சுற்றில் முதல் குரூப்பில் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள் இடம்பெறுள்ளன. அதேபோல் இரண்டாவது குரூப்பில் இந்தியா,பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா மற்றும் முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சூப்பர் 12ல் இந்தியாவின் அட்டவணை:
23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)
27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)
30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)
2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)
6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின்னர் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2 ஆவது இடம் பிடிக்கும் அணி, தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் மற்றும் தகுதிச் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் விளையாட உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இறுதி போட்டி நவம்பர் 13ஆம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அதேபோல் இம்முறையும் டி20 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த முறை அடந்த தோல்விக்கு இம்முறை இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.