இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது தொடர்பாக, ஷிகர் தவான் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் பேசிய போது, ”வாழ்க்கையில் மேடு, பள்ளங்கள் என்பது ஒரு அங்கம். என்னைவிட ஒருவர் நன்றாக விளையாடினால் நல்லது தான். அதன் காரணமாக தான் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. எனக்கு கிடைக்கவில்லை.  எனக்கென்று உள்ளதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீண்டும் அணிக்கு திரும்ப எனக்கு வாய்ப்புள்ளது. நடந்தால் நல்லது, நடக்காவிட்டாலும் நல்லது. நான் நிறைய சாதித்துவிட்டேன். அதை நினைத்து நான் மகிழ்ச்சியாக உள்ளேன். எது கிடைகுமோ அது நிச்சயமாக கிடைக்கும். எதற்காகவும் நான் தவிக்கப்போவதில்லை, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு தலைமை தாங்க ஆர்வமாக உள்ளேன். விரைவில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இருக்கிறேன்” என ஷிகர் தவான் விளக்கமளித்துள்ளார்.


வாய்ப்பை இழந்த தவான்:


இந்திய அணியின் தவிர்க்க முடியாத நட்சத்திரமாக இருந்த தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான், முதலில் டெஸ்ட் மற்றும் டி-20 போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். அதேநேரம், அவருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த் சில காலங்களாகவே அவரது ஆட்டம் எதுவும் சிறப்பாக அமையவில்லை. குறிப்பாக வங்கதேச அணியுடனான தொடரில் கேப்டனாக செயல்பட்ட போதிலும் அவரது ஆட்டம் கவனம் ஈர்க்கவில்லை. கடந்த ஆண்டில் அவரது சராசரி வெறும் 34.40 என்பது குறிப்பிடத்தக்கது. 


தட்டிப்பறிந்த இளைஞர்கள்:


தவானின் மோசமான ஃபார்முடன் சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் அபார வளர்ச்சியும் கூட, உலகக்கோப்பைக்கான உத்தேச அணியில் கூட தவானுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டதற்கு முக்கிய காரணமாகும். உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஷிகர் தவானின் இடத்தை பிடித்துள்ள சுப்மன் கில், கடைசியாக அவர் விளையாடிய 7 சர்வதேச போட்டிகளில், 4 சதங்களை விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து. 


தவான் சாதனை:


ரோகித் சர்மாவுடன் சேர்ந்து இந்திய அணிக்கான தொடக்க ஆட்டக்கரராக களமிறங்கி வந்த ஷிகர் தவான் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருவரும் இந்திய அணிக்காக 117 போட்டிகளில் தொடக்க ஆட்டக்கரர்களாக களமிறங்கி, 5193 ரன்களை சேர்த்துள்ளனர். அதிகபட்சமாக ஒரே போட்டியில் 210 ரன்களை சேர்த்துள்ளனர். 37 வயதான தவன் இந்திய அணிக்காக இதுவரை 34 டெஸ்ட் போட்டிகள், 167 ஒருநாள் போட்டிகள் மற்றும் 68 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதிகபட்சமாக, ஒருநாள் போட்டிகளில் 6,793 ரன்களை சேர்த்துள்ளார். இந்திய அணிக்காக இவர் விளையாடிய அனைத்து உலகக்கோப்பை தொடரகளிலும், சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவான் 206 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 6,243 ரன்களையும் சேர்த்துள்ளார்.