கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக நடந்த ரஞ்சிக் கோப்பை தொடர் தற்போது இறுதி போட்டியை எட்டியுள்ளது. லீக், காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுகளின் அடிப்படையில் பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றனர். பெங்கால் அணிக்கு மனோஜ் திவாரியும், சௌராஷ்டிரா அணிக்கு இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெய்தேவ் உனத்கட்டும் தலைமை தாங்கி வருகின்றனர். 


இந்தநிலையில், இரு அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய பெங்கால் அணி சௌராஷ்டிரா அணியின் பந்துவீச்சாளர்களின் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தொடக்கம் முதலே தடுமாறியது. விக்கெட்கள் வேக வேகமாக சரிய பெங்கால் அணி 54.1 ஓவர்களில் 174 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 


சௌராஷ்டிரா அணியில் அதிகபட்சமாக கேப்டன் உனத்கட் மற்றும் சேதன் சகாரியா தலா 3 விக்கெட்களும், சிராக் ஜானி மற்றும் தர்மேந்திரசிங் ஜடேஜா தலா 2 விக்கெட்களும் கைப்பற்றி இருந்தனர். 


இந்தநிலையில், உனத்கட் தனது 3வது விக்கெட்டான முகேஷ் குமாரை வீழ்த்தியதன் மூலம் ரஞ்சி டிராபியில் 300 விக்கெட்களை பூர்த்தி செய்துள்ளார். 


கடந்த 2010 ம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் அறிமுகமான உனத்கட், தனது 77வது போட்டியில் பெங்கால் வீரர் முகேஷ் குமாரை வீழ்த்தி இந்த சாதனையை படைத்தார். 31 வயதான உனத்கட் பிரிமீயர் ரெட் பால் போட்டியில் 300 விக்கெட்களை வீழ்த்திய முதல் சௌராஷ்டிரா பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். 


இந்த 22-23 ரஞ்சி சீசனில் சௌராஷ்டிரா அணிக்கு தலைமை தாங்கியுள்ள உனத்கட் 7 சீசனில் விளையாடி 20 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், கடந்த 2019-20 சீசனில் சௌராஷ்டிரா அணிக்கு பட்டத்தை வென்று கொடுத்த உனத்கட், 10 போட்டிகளில் 67 விக்கெட்களை வீழ்த்திருந்தார். இதன் மூலம் ஒரு ரஞ்சி டிராபி சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் உனத்கட் படைத்துள்ளார். 


இந்த ஆண்டு தொடக்கத்தில், ராஜ்கோட்டில் டெல்லிக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் உனத்கட் முதல் ஓவரில் ஹாட்ரிக் சாதனை படைத்தார். அதே இன்னிங்ஸில் 39 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 


ஒட்டுமொத்தமாக, உனத்கட் முதல்தர கிரிக்கெட்டில் 173 இன்னிங்ஸ்களில் 21 ஐந்து விக்கெட்களுடன் 376 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 


கழட்டிவிடப்பட்ட உனத்கட்:


இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில்  முதலாவது டெஸ்ட் போட்டி ஏற்கனவே முடிவடைந்து விட்டது. இதில், இந்திய அணி வெற்றி பெற்றது. மீதமுள்ள 3 போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் இருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனத்கட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 


இதுகுறித்து இந்திய அணி பிசிசிஐயில் தெரிவித்துள்ளதாவது, பெங்கால் அணிக்கு எதிராக பிப்ரவரி 16ஆம் தேதி முதல் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள மாஸ்டர்கார்டு ரஞ்சி டிராபி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற சௌராஷ்டிரா அணியின் சார்பில் ஜெய்தேவ் உனத்கட் களமிறங்கவேண்டி உள்ளதால், அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.