இக்கட்டான சூழ்நிலைகளை சிறப்பாக கையாண்டு சென்ற ஆண்டு இந்திய அணிக்கு தவிர்க்க முடியாத ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணி வீரராக செயல்பட்ட ஷ்ரேயாஸ் ஐயர் காயத்தில் இருந்து மீண்டு உடல் தகுதியுடன் வந்த நிலையில் அவர் ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என்று உறுதி கூறியுள்ளார் ராகுல் டிராவிட்.


மீண்டு வந்த ஷ்ரேயாஸ்


கடந்த மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரின் போது ஷ்ரேயாஸ் ஐயர் கீழ் முதுகில் காயம் அடைந்தார். மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஒரு மாத மறுவாழ்வு திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டையும் ஷ்ரேயாஸ் தவறவிட்டதால் சூர்யகுமார் யாதவிற்கு வாய்ப்பு கிடைத்தது. கடந்த 32 நாட்களாக ஷ்ரேயாஸ் ஐயர் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. ஆனால் தற்போது மீண்டு வந்துள்ள ஷ்ரேயாஸ் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வியை ரசிகர்கள் பல நாட்களாக எழுப்பி வருகின்றனர். அந்த கேள்விக்கு பதில் கூறும் விதமாக, "எந்த ஒரு திறமையான வீரரும், காயத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு, தானாகவே தனது இடத்தைத் திரும்பப் பெறுவார்", என்ற அணி நிர்வாகத்தின் தத்துவத்தைக் கூறினார். மேலும் மாற்று வீரர் சதம் அடித்தாலும் அல்லது ஐந்து விக்கெட்டுகளை எடுத்தாலும், முதல் தேர்வு வீரர் காயத்தில் இருந்து திரும்பினால், அவர் வெளியில்தான் உட்கார வேண்டும் என்று டிராவிட் கூறினார். 



நிச்சயம் ஆடும் லெவனில் இருப்பார்


"வீரர்கள் காயத்தில் இருந்து மீண்டு வருவது நல்லது. காயத்தால் வீரர்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை. அது அணிக்கும், தனிப்பட்ட வீரருக்கும் நல்லதல்ல. ஷ்ரேயாஸ் உடல் தகுதியுடன் இருப்பது மகிழ்ச்சி, இரண்டு பயிற்சி அமர்வுகளுக்கு பிறகு அவரை அணியில் இணைக்கலாம்", என்று கூறிய டிராவிட், இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் இரண்டாவது மற்றும் இறுதிப் பயிற்சிக்குப் பிறகு அணியின் மருத்துவ உதவி ஊழியர்களுடன் இணைந்து ஷ்ரேயாஸ் ஐயரின் உடற்தகுதியை மதிப்பிடுவார்கள். "முதல் அமர்வில் அவர் சில பயிற்சிகளை செய்துள்ளார். இரண்டாவது அமர்வில் அதை மதிப்பீடு செய்வோம், மேலும் அவர் எப்படி உணருகிறார் என்பதைப் பார்ப்போம். அவருடைய கடந்த கால பங்களிப்பை கருத்தில் கொண்டால், ஐந்து நாள் டெஸ்ட் போட்டியில் சுமைகளை தங்கும் அளவுக்கு தயாராக இருக்கும் பட்சத்தில், சந்தேகத்திற்கு இடமின்றி, நிச்சயமாக அவர் ஆடும் 11 பேரில் இடம் பிடிப்பார்", என்று டிராவிட் கூறினார்.


Watch Video : நடுரோட்டில் தகராறு: தரதரவென இழுத்து இளைஞரை குத்திக் கொன்ற 10 பேர் கொண்ட கும்பல் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி...!


மாற்று வீரருக்கு பெஞ்ச்தான்


மேலும் பேசிய டிராவிட் "காயம் காரணமாக போட்டியை தவறவிட்டவர்களின் பங்களிப்பை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் இல்லாத நேரத்தில் என்ன நடந்தது என்பதைப் பொருட்படுத்தாமல், திரும்பி வருவதற்கு அவர்கள் உண்மையில் தகுதியானவர்கள். காயமடைந்த ஒருவருக்குப் பதிலாக யாராவது விளையாடி இருக்கலாம், அந்த நபர் திரும்பி வந்தால், அவர் மீண்டும் (விளையாடும் XI இல்) இடம்பெறுவார் என்பது அணியின் தத்துவம், அதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். மாற்று வீரர் சதம் அடித்திருந்தாலும் சரி, ஐந்து விக்கெட் வீழ்த்தியிருந்தாலும் சரி, இதுதான் எங்கள் நிலைபாடு', என்றார். 



ஏன் ஷ்ரேயாஸ் தகுதியான வீரர்?


ஷ்ரேயாஸ் ஐயர் தகுதியானவர் என்று ஏன் உணர்கிறார் என்பதை விளக்கிய டிராவிட், "ஸ்ரேயாஸ் நன்றாக விளையாடினார், ஆனால் அவரது குணாதிசயமே தனித்து நிற்கிறது, சில அழுத்தமான சூழ்நிலைகளில் அணிக்கு நல்ல பங்களிப்பை தருகிறார், கான்பூரில் தனது முதல் ஆட்டத்தின் மூலமாகவும் மேலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளில், ஒவ்வொரு முறையும், அவர் கடினமான சூழ்நிலைகளில் அணிக்காக விளையாடியுள்ளார். அவர், ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர்தான் அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றும் முக்கியமான ஆட்டத்தை ஆடுகிறார்கள். வங்கதேசத்துடனான போட்டியில் கடுமையான அழுத்தத்தில் இருந்த போது, அவர் அஷ்வினுடன் இணைந்து ஆட்டத்தை கைக்கு கொண்டு வந்தார். அது ஒரு நல்ல அறிகுறி. சுழற்பந்துவீச்சை நன்றாக விளையாடும் அவரது திறமையுடன், உள்நாட்டில் விளையாடுவதற்கு மிகவும் தகுதியான வீரராக இருக்கிறார். அழுத்த சூழ்நிலைகளைச் சமாளிக்கும் திறன், அந்த மனோபாவம் மற்றும் அந்த நேரத்தில் தீர்வுகளைக் கண்டறியும் திறன் ஆகியவையும் முக்கியமானவை. அவர் அதில் மிகச் சிறந்தவர் மற்றும் தகுதியானவர், ”என்று டிராவிட் மேலும் கூறினார்.