வீரேந்திர சேவாக் விமர்சித்தது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ​​ஷாகிப் அல் ஹசன் "சேவாக் என்றால் யார்?" என்று பதிலளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற வங்கதேசம்:


கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக் கோப்பை போட்டி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூன் 13) நடைபெற்ற 27 வது லீக் போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


வெற்றிக்கு பங்காற்றிய ​​ஷாகிப் அல் ஹசன்:


இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்தவகையில் வங்கதேச அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர்  ​​ஷாகிப் அல் ஹசன். கடைசி வரை களத்தில் நின்ற அவர் 46 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 64 ரன்களை விளாசினார். இந்நிலையில் போட்டி முடிந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.


சேவாக் என்றால் யார்?


அப்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு  ​​ஷாகிப் அல் ஹசன் அளித்த பதில் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது வீரேந்திர சேவாக் உங்களை விமர்சன் செய்கிறாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. 


அதற்கு பதிலளித்த  ​​ஷாகிப் அல் ஹசன், சேவாக் என்றால் யார்? என்றார்.






பின்னர் தொடர்ந்து பேசிய அவர், “எனது செயல்திறனைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படவில்லை. எனது வாழ்க்கையில் அந்த எண்ணம் எனக்கு இருந்ததாக நான் நினைக்கவில்லை. அணிக்கு என்னால் பங்களிக்க முடிந்தால் நான் நன்றாக உணர்கிறேன்.


நான் சொன்னது போல், இன்று எனது நாளாக இருக்கலாம், ஆனால் நாளை அது வேறு ஒருவருக்கான நாளாக அமையலாம். அடுத்த போட்டியில் அது எங்களுக்கான நாளாகக் கூட அமையலாம்”என்றார் ஷாகிப் அல் ஹசன்.


அப்படி என்ன விமர்சனம் செய்தார் சேவாக்?


அதவாது அண்மையில் சேவாக் ஒரு பேட்டியில் பேசுகையில், “கடந்த உலகக் கோப்பையின் போதே  இனி டி20 வடிவத்தில் ஷாகிப் அல் ஹசனை எடுக்கக்கூடாது என்று நினைத்தேன். அவருக்கு ஓய்வு பெறுவதற்கான நேரம் நீண்ட காலத்திற்கு முன்பே வந்து விட்டது.


நீங்கள் ஒரு மூத்த வீரர், நீங்கள் இந்த அணியின் கேப்டனாக இருந்தீர்கள். இப்போது நீங்கள் உங்களது ஓய்வை தானாக வந்து அறிவிக்க வேண்டும்“என்று ஷாகிப் அல் ஹசனை கடுமையாக சேவாக் விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சேவாக்கை யார் என்று கேட்ட ஷாகிப் அல் ஹசனை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதேபோல் ஷாகிப் அல் ஹசனுக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: T20 WC 2024 Super 8: சூப்பர் 8 சுற்று..பாகிஸ்தானின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அமெரிக்கா - அயர்லாந்து போட்டி!


மேலும் படிக்க: T20 World Cup 2024: இந்திய அணியின் அடுத்த போட்டி..எங்கே ? எப்போது? முழு விவரம் உள்ளே!