மகளிர் பிரீமியர் லீக்கில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீராங்கனை ஷாஃபாலி வர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்து, அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். 


19 பந்துகளில் அரை சதம்


ஷாபாலி 8 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரை சதத்தை எட்டி சாதனை படைத்துள்ளார். 17 பந்துகளில் 45 ரன்களில் பேட்டிங் செய்த ஷஃபாலி, 18 பந்துகளில் சோபியா டன்க்லியின் சாதனையை சமன் செய்து, WPL இன் வேகமான அரைசதத்தைப் பதிவு செய்யும் வாய்ப்பைப் பெற்றார், ஆனால் அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆனால் அடுத்த பந்தே பவுண்டரிக்கு விரட்டி 19 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஷஃபாலியின் பேட்டிங்கால் டெல்லி கேபிடல்ஸ் பவர் பிளேயின் 6 ஓவர்களிலேயே 87 ரன்கள் எடுத்தது.



சரிந்த குஜராத்


குஜராத் ஜெயண்ட்ஸ் டாஸ் வென்ற நிலையில், கேப்டன் ஸ்னே ராணா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதனால் DC தொடரில் முதல் முறையாக சேஸ் செய்ய இருந்தது. தென்னாப்பிரிக்காவின் மரிசான் கேப் அணிக்காக பந்துவீச்சைத் துவங்க, ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே சபிஹினேனி மேகனாவை அவுட் செய்ததால், குஜராத் அணி அங்கிருந்தே நிலை குலைந்தது. அடுத்த பந்திலேயே ஆஷ்லே கார்ட்னரை அனுப்ப, தனது இரண்டாவது ஓவரில் லாரா வோல்வார்ட்டை வெளியேற்றி அசத்தினார்.


தொடர்புடைய செய்திகள்: படுத்தியெடுக்கும் H3N2 வைரஸ்...செய்யவேண்டியது என்ன? செய்யக்கூடாதது என்ன? உலக சுகாதார அமைப்பு சொல்வதை கேளுங்கள்..!


ஓரளவுக்கு மீட்ட ஜோடி


ஜிஜியின் தயாளன் ஹேமலதா 14 பந்துகளில் 20 ரன்களில் இருந்த ஹர்லீன் தியோலை வெளியேற்ற, அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ ஆரம்பித்தன. பாண்டே இரண்டு விக்கெட்டுகளைப் வீழ்த்த, ராதா யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்டத்தின் ஏழாவது ஓவரில் 33/6 என்ற மோசமான நிலைக்குச் சென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் நன்றாக மீண்டு வந்தது. ஜார்ஜியா வேர்ஹாமின் 22 ரன்களும், கிம் கார்த் 37 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் எடுத்ததால், ஜயண்ட்ஸ் மூன்று இலக்கங்களைக் கடந்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 105 ரன்களை பதிவு செய்தது.



7.1 ஓவரில் ஆட்டத்தை முடித்த டெல்லி


குறைந்த டார்கெட்டை டெல்லி கேப்பிடல்ஸ் துரத்தியது. அதனையும் அதிரடி ஆட்டம் மூலம் வெறும் 7.1 ஓவர்களிலேயே எட்டி சாதனை படைத்தது. 43 பந்துகளில் இலக்கை வெற்றிகரமாக அடைந்த அணி என்று பெயர் பெற்றுள்ளது. டெல்லி 10 விக்கெட்டுகளையும் இழக்காமல் இந்த இலக்கை எட்டியது குறிப்பிடத்தக்கது. உடன் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர் மெக் லானிங் 15 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியில் கேபிடல்ஸ்-இன் ஷெபாலி வர்மா அடித்த இரண்டாவது அரை சதம் இதுவாகும். முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஷபாலி 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஷெபாலி வர்மா 28 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.