இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியை இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியை தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளன. 


இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் இதுவரை கேப்டவுன் மைதானத்தில் இந்திய அணியின் செயல்பாடுகள் என்னென்ன? என்பது குறித்து பார்க்கலாம்.


கேப்டவுன் மைதானத்தில் இந்தியா:


கேப்டவுன் மைதானத்தில் இதுவரை இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இதில் 1993ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 1997 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 282 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பின்னர் 2007ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியையும் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 2011ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியை தோனி தலைமையிலான இந்திய அணி டிரா செய்தது. 


 






கடைசியாக 2018ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் கேப்டவுன் டெஸ்டில் தோல்வி அடைந்தது. ஆகவே மொத்தமாக கேப்டவுனில் விளையாடியுள்ள 5 போட்டிகளில்  இந்திய அணி 3ல் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. கேப்டவுன் மைதானத்தில் இந்திய டெஸ்ட் போட்டியை இதுவரை வென்றதே இல்லை. 


கேப்டவுனில் டெஸ்ட் போட்டிகள்:


கேப்டவுன் மைதானத்தில் இதுவரை 58 டெஸ்ட் போட்டிகல் நடைபெற்றுள்ளன. அவற்றில் முதலில் பேட்டிங் செய்த அணி 23 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த 24 முறையும் போட்டியை வென்றுள்ளன.இங்கு அதிகபட்சமாக ஒரே இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 651 ரன்களை அடித்துள்ளது. அதேபோல் ஒரு இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோராக 35 ரன்கள் என்பதையும் தென்னாப்பிரிக்க பதிவு செய்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா கேப்டவுனில் 6 டெஸ்ட் போட்டிகளில் 35 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல் பேட்டிங்கில் கேப்டவுன் மைதானத்தில் டின் எல்கர் 10 டெஸ்டில் 708 ரன்கள் அடித்துள்ளார். கேப்டவுன் மைதானத்தில் அவர் 2 சதம் மற்றும் 3 அரைசதங்களை அடித்துள்ளார்.




கடந்த ஆண்டு இந்திய அணி எந்தெந்த மைதானங்களில் எல்லாம் வெற்றி பெறவே இல்லையோ அந்த மைதானங்களில் வெற்றி பெற்று அசத்தியது. காபா, பிரிஸ்பெயின், ஓவல், செஞ்சுரியன் உள்ளிட்ட மைதானங்களில் இந்திய அணி தன்னுடைய முதல் டெஸ்ட் வெற்றியை கடந்த ஆண்டு பதிவு செய்தது. அதேபோல் இந்தாண்டும் இந்திய அணி இதுவரை வெல்லாத கேப்டவுன் மைதானத்தில் வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க: சுற்றி வளைத்த ஆஸ்திரேலிய அணி! பெவிலியனில் அமர்ந்து பதறிய ஸ்டோக்ஸ்... வைரலாகும் வீடியோ!