ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னி நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 416 ரன்கள் எடுத்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம்பிடித்த உஸ்மான் கவாஜா 137 ரன்கள் அடித்தார். அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அடுத்தடுத்து விக்கெட் இழந்து தடுமாறியது. அந்த அணியின் பெர்ஸ்டோவ் மட்டும் சதம் அடிக்க 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இங்கிலாந்து இழந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மீண்டும் உஸ்மான் கவாஜா 101 ரன்கள் விளாசினார். இதனால் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழந்து 265 ரன்கள் எடுத்தது. அத்துடன் இங்கிலாந்து அணிக்கு 388 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. நான்காம் நாளான நேற்று இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் க்ராளி 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடி ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய பெர்ஸ்டோவ் 41 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். கடைசியாக ஜேக் லீச் மற்றும் பிராட் ஜோடி ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சை சமாளித்தது. இருவரும் நல்ல தடுப்பு ஆட்டத்தை முன்வைத்து விக்கெட்டை காப்பாற்றி வந்தனர். ஜேக் லீச் 26 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் ஆட்டத்தில் கூடுதல் பரப்பரப்பு அதிகமானது. கடைசி 3 ஓவர்களை ஆண்டர்சென்-பிராட் ஜோடி தாக்குப்பிடித்தால் போட்டி டிராகிவிடும் என்ற நிலை வந்தது.
அப்பொழுது, இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மிகவும் பதற்றமடைந்து போட்டியை காண முடியாமல் பெவிலியனில் அமர்ந்து தவிர்த்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிராட் மற்றும் ஆண்டர்சன் ஆட்டமிழக்காமல் இங்கிலாந்தை தோல்வியில் இருந்து காப்பாற்றினர். இதன் மூலம், ஆஷஸ் தொடரில் தொடர்ச்சியாக மூன்று தோல்விகளுக்குப் பிறகு ஒரு டெஸ்டில் ஆஸ்திரேலியாவை வெற்றி பெறவிடாமல் இங்கிலாந்து அணி செய்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்