கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல், பிசிசிஐயின் தேர்வுக் குழு, இடைக்காலத் தலைவரான ஷிவ் சுந்தர் தாஸ், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தார். இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் முகேஷ் குமார் போன்ற புதுமுக வீரர்கள் அணியில் இடம் பெற்றாலும், தொடர்ந்து ரஞ்சி தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்துவரும் சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாதது பலருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. பலரும் இது குறித்து பேசி வரும் நிலையில், சர்ஃபராஸ் கானே பிசிசிஐ தேர்வாளர்களுக்கு பதிலடியை தந்துள்ளார்.
ரஞ்சி தொடர் ஃபார்ம்
சர்பராஸ் ரஞ்சி தொடரில் மலை போல் ரன்களை குவித்து வந்தது பலருக்கும் விரைவில் அவரை சர்வதேச போட்டிகளில் பார்க்கும் எண்ணத்தை தூண்டியது. 2019/20 சீசனில், அவர் 154 என்ற மிகப்பெரிய சராசரியில் 928 ரன்களைக் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த சீசனில், அவர் 122.75 சராசரியில் 982 ரன்களைக் குவித்தார். பின்னர் அதைத் தொடர்ந்து 2022/23 சீசனில் 556 ரன்கள் எடுத்ததோடு, அதில் மூன்று சதங்களையும் அடித்தார். ஒட்டுமொத்தமாக, அவர் 35 போட்டிகளில் 13 சதங்களுடன் 79.65 சராசரியுடன் 3505 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஒதுக்கப்பட்ட சர்ஃபராஸ்
நல்ல ஃபார்மில் இருந்தபோதிலும், சர்ஃபராஸ் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கவில்லை. கடந்த ஆண்டு பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கான அணியில் அவர் இடம் பெறுவார் என்பது ஏறக்குறைய உறுதியாக இருந்தது, ஆனால் அப்போதும் அது நடக்கவில்லை. அதே போல 2023 ஆம் ஆண்டு இதேபோன்று அவர் பார்டர்-கவாஸ்கர் தொடரிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டார், பின்னர் WTC இறுதிப் போட்டி அணியிலும் இல்லை. இந்த நிலையில் பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இருந்த போது பலர் இவர் பெயரை எதிர்பார்த்தனர். அதிலும் அவர் பெயர் இடம்பெறாதது பெரும் அதிர்ச்சியை அளித்தது.
பதிலளிக்கும் விடியோ
அவரை தொடர்ந்து ஒதுக்கி வருவதற்கு பதிலளிக்கும் விதமாக, சர்ஃபராஸ் கடந்த ரஞ்சி டிராபி சீசனில் இருந்து தனது சிறப்பான ஆட்டத்தை தொகுத்து அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். அதில் அவர் எதுவும் எழுதவில்லை என்றாலும், எதுவும் எழுத தேவையில்லை என்பதே உண்மை. அந்த வீடியோவே ஒரு பெரிய ஸ்டேட்மென்ட் தான் என்கின்றனர் ரசிகர்கள்.
கவாஸ்கர் காட்டம்
முன்னதாக வெள்ளிக்கிழமை, பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் தேர்வின் மீது கேள்வி எழுப்பிய நிலையில், சர்ஃபராஸ் கானை தொடர்ந்து ஒதுக்குவது குறித்து கோபத்தை வெளிப்படுத்தினார். "கடந்த மூன்று சீசன்களிலும் சர்ஃபராஸ் கான் சராசரியாக 100 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அணியில் தேர்வு செய்யப்படுவதற்கு இதற்கு மேல் என்ன செய்ய வேண்டும்? அவர் XI இல் இல்லாமல் இருக்கலாம், ஆனால் நீங்கள் அவரை அணியில் தேர்வு செய்யுங்கள்" என்று கவாஸ்கர் கூறினார். "அவரது ஆட்டம் அங்கீகரிக்கப்படுகிறது என்று அவரிடம் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இல்லையெனில், ரஞ்சி டிராபி விளையாடுவதை நிறுத்தச் சொல்லுங்கள், அதனால் எந்தப் பயனும் இல்லை, ஐபிஎல் தான் முக்கியம் என்று வெளிப்படையாக கூறிவிடுங்கள்," என்று காட்டமாக பேசினார்.