இந்தியா - வங்கதேசம் டெஸ்ட்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சர்ஃபராஸ் கான், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட்:


வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது போட்டிக்கான இந்திய அணி வீரர்களை பிசிசிஐ அறிவித்தது.


வேகப் பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இரண்டாவது போட்டியில் ஓய்வு அளிக்கப்படும் எனவும், முதல் போட்டியில் சரியாக ஆடாத வீரர்களுக்கு பதிலாக இரண்டாவது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டது. அதன்படி இந்திய அணியின் இளம் வீரர் சர்ஃபராஸ் கானுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. 


விடுவிக்கப்படும் சர்ஃபராஸ் கான்:


இந்த நிலையில் தான் டெஸ்ட்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சர்ஃபராஸ் கான், கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக விடுவிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.  கான்பூரில் இந்தியா - வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் செப்டம்பர் 27 அன்று தொடங்க உள்ளது. சர்ஃபராஸ் கான் ஆடும் லெவன் அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், மும்பை கிரிக்கெட் சங்கம் இரானி கோப்பையில் பங்கேற்க அவரை அனுமதி கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சி டிராபி சாம்பியனான அஜிங்க்யா ரஹானே தலைமையிலான மும்பை, தனது வரவிருக்கும் இரானி கோப்பை ஆட்டத்தில் லக்னோவில் ரெஸ்ட் ஆஃப் இந்தியாவை எதிர்கொள்கிறது.


இது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகி ஒருவர் பேசுகையில்,"அணியில் உள்ள ஒரே ஸ்பெஷலிஸ்ட் மிடில் ஆர்டர் பேட்டர் சர்ஃபராஸ் கான். துருவ் ஜூரல் ஒரு கீப்பர்-பேட்ஸ்மேன் மற்றும் அக்சர் படேல் ஒரு ஆல்-ரவுண்டர்.


ஒரு  மாற்று வீரர் தேவை என்றால் என்ன செய்வது? இரானி கோப்பை தொடங்குகிறது. அக்டோபர் 1ம் தேதியும், செப்டம்பர் 30ம் தேதியும் கான்பூரிலிருந்து லக்னோவுக்கு பயணம் செய்வது பெரிய விஷயமாக இருக்காது. இதனால் மாற்றம் இருக்கலாம்"என்று கூறியுள்ளார்.  முஷீர் கான், ஸ்ரேயாஸ் ஐயர், தனுஷ் கோட்டியன் மற்றும் ஷம்ஸ் முலானி ஆகியோர் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆஃப் இந்தியா இரானி கோப்பை போட்டியில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.